Latest News

இப்படியும் கூட மோசடிகள் பண்ணமுடியுமா ?

இப்படியும் கூட மோசடிகள் பண்ணமுடியுமா? என திகைத்து திகிலடிக்க வைக்கிறார்கள்... சிதம்பரத்தைச் சேர்ந்த சினிமா தயாரிப்புச் சகோதரர்களான அந்த மும்மூர்த்திகள்.

பி.வாசுவின் மகனான ஷக்தி மற்றும் சந்தியா ஆகியோரை வைத்து '"மகேஷ் சரண்யா மற்றும் பலர்'' என்ற படத்தையும்... பரத், பிரியாமணியை வைத்து "ஆறுமுகம்'' படத்தையும் புதுமுகங்களைக் கொண்டு "புடிச்சிருக்கு'' என்ற படத்தையும்... தங்கள் 'கூல் புரொடக்ஷன்ஸ்' மூலம் எடுத்தவர்கள்... சிதம்பரத்தைச் சேர்ந்த மும்மூர்த்திகள். அதாவது... மீனாட்சிசுந்தரம், செண்பக குமார், முத்தரசு ஆகிய உடன்பிறந்த சகோதரர்கள்தான் இந்த மும்மூர்த்திகள். இவர்கள் மேற்கண்ட படங்களை எப்படி எடுத்தார்கள்?

இந்தக் கேள்வியின் பின்னணியில்... துபாய்க்கு வேலை தேடிப்போன நம் தமிழகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அப்பாவிகளின் வேதனை மிகுந்த கண்ணீர்க் கதை இருக்கிறது.

நம்மை சார்ஜாவில் இருந்து முதலில் தொடர்புகொண்டவர்... ஜெயராமன். பேச வேண்டிய அவர் பேச முடியாமல் தேம்பித் தேம்பி அழ... அவருக்கு பதில் ரிசீவரில் வந்தார் ராமசாமி. அவரிடமும் அழுகை கலந்த குரல்தான் வெளிப் பட்டது.

 

""ஐயா... அந்த சிதம்பரம் சகோதரர்களை நம்பி துபாய்க்கு வேலைக்காக வந்தோம். இப்ப சோத்துக்குக் கூட வழியில்லாமல், துபாய் மக்கள் ரோட்டோரம் வீசும் வெற்று குளிர்பான டப்பாக்களைப் பொறுக்கி விற்று... அரைகுறையா சாப்பிட்டு உயிரைக் கையில் பிடிச்சிக்கிட்டு இருக்கோம். தமிழ்நாட்டுக்குத் திரும்ப முடியுமா? எங்க பெண்டாட்டி பிள்ளைகளைப் பார்க்க முடியுமா? இல்ல.... இங்கேயே எங்க ஆயுள் முடிஞ்சிடுமான்னு தெரியாம தவிச்சிக்கிட்டு இருக்கோம். எங்க துயர நிலையை நக்கீரன்தான் வெளியே கொண்டுவந்து.. எங்களை மீட்க உதவணும்'' என தங்கள் நிலையைச் சொன்னார் தேம்பலோடு வேலை தேடித் துபாய் போன இவர்களுக்கெல்லாம் என்ன ஆனது?

 

"அந்த சிதம்பரம் சகோதரர்கள் சார்ஜாவில் ஒரு கட்டடத்தைப் பிடிச்சி அதில் மிஸ்கோ மரைன் சர்வீஸ் என்ற பெயரில் ஒரு மேன்பவர் கம்பெனியைத் தொடங்கினாங்க. வெல்டர், பிட்டர், என்ஜினியர்னு தமிழ்நாட் டில் அவங்க ஆள் எடுக்க... இவங்களை நம்பி... கடன்பட்டு பாஸ் போட், விசா எடுத்து லட்சக்கணக்கில் பணம் கட்டி.. இங்க வேலைக்கு வந்தோம். அப்படி வேலைக்கு வந்த எங்களின் பேரில் எங்களுக்கே தெரியாம சார்ஜாவில் இருக்கும் வங்கிகள்ல கோடிக் கணக்கில் கடன்வாங்கி... தமிழ்நாட்டில் முதலீடு போட்டு படம் எடுத்தாங்க. இதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. கடன்கொடுத்த வங்கிக்காரங்க எங்களைத் தேடிவந்தப்ப தான் இது எங்களுக்குத் தெரிஞ்சிது. அதிர்ந்துபோய்ட்டோம். எங்களைத் துரத்த ஆரம்பிச்ச வங்கிக்காரங்களுக்கு பயந்து.... இப்ப தலைமறைவா இங்க வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். எங்க பெயர்கள்ல அவங்க சார்ஜா வங்கிகள்ல வாங்கிய கடன்மட்டும் 80 கோடிக்கு மேலாம்''' என்றார்கள் அவர்கள் பதட்டமாய்.

 

ஜெயராமனின் அனுபவம் இது. ""எனக்கு சொந்த ஊர் திருச்சி மாவட்டம் வந்தலைக் கூடலூர். எனக்கு விஜயகுமாரின்னு மனைவியும் ரெண்டு பிள்ளைகளும் இருக்காங்க. புள்ளம்பாடியில் தையல் கடைவச்சேன். அதிகமா சம்பாதிக்க முடியலை. அப்பதான் வெளிநாட்டுக்குப் போனா நல்லா சம்பாதிக்கலாமேன்னு கடனை வாங்கி ஏஜெண்டான அனுந்தலைப்பூர் மகேஷ் மூலம் இங்க வந்தேன். இந்த மூவர் டீம் நடத்திய கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். கொடுத்த சம்பளத்தையும் 2008-ல் இவங்க நிறுத்திட்டாங்க. சரி சம்பளமே வேணாம். எங்களை ஊருக்கு அனுப்பிடுங்கன்னு கேட்டோம். பார்க்கலாம்னு சொன்ன முத்தரசும் மீனாட்சிசுந்தரமும் தமிழ்நாட்டுக்கு பெரும் பணத்தோட ஓடிவந்துட்டாங்க. அப்புறம்தான் தெரிஞ்சிது என் பேர்ல அவங்க 90 லட்ச ரூபாயை இங்க இருக்கும் வங்கியில் கடன்வாங்கிய விசயமே.


இதனால் வெளியேயும் தலைகாட்ட முடியாம... ஊருக்கும் திரும்பமுடியாம தவிச்சிக்கிட்டு இருக்கேன்'''என்கிறார் துக்கம் தொண்டையை அடைக்க. திருவாரூர் மாவட்டம் பில்லூர் முருகனோ "எனக்கு ஒரு அண்ணன், 5 சகோதரிகள். அப்பா ரொம்ப வருசத்துக்கு முன்னயே இறந்து போயிட்டார். வயசான அம்மாதான் குடும்பத்தைத் தாங்கறாங்க. குடும்பத்தைத் தூக்கி நிறுத்தணும்னு இங்க வேலைக்கு வந்தேன். என் பேரிலும் அந்த மோசடி முதலாளிகள் லட்சக் கணக்கில் கடன் வாங்கியிருக்காங்களாம். என்ன பண்றதுன்னே தெரியலைங்க'''என்றார் துயரத்தோடு.

 

தூத்துக்குடி காளியப்பர் கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணனோ "2005-ல் இங்க வேலைக்கு வந்தேன். ஆரம்பத்தில் 8 ஆயிரம் ரூபா சம்பளம் கொடுத்தாங்க... என் செலவு போக 5 ஆயிரம் ரூபா வீதம் வீட்டுக்கு அனுப்பிக்கிட்டு இருந்தேன். சம்பளத்தை இனி நேரா வங்கிகள்ல எடுத்துக்கலாம்னு சொல்லி என்னென்னவோ டாக்குமெண்டுகளில் என்னிடம் கையெழுத்து வாங்கினாங்க. அப்புறம்தான் தெரிஞ்சிது யு.ஏ.இ. வங்கியில் என்பேர்ல அவங்க 50 லட்சம் கடன்வாங்கியது. 


அந்த பேங்க் ஏஜெண்டுகள் தூத்துக்குடியில் இருக்கும் என் வீட்டில்போய் சத்தம் போட்டி ருக்காங்க. இது சம்பந்தமா இந்திய தூதரகத்தில் முறையிட்டோம். வெளியுறவு அமைச்சர் வயலார் ரவிக்கு புகார் அனுப்பினோம். ஒரு நடவடிக்கையும் இல்லைங்க'''என்றார் அழுகை பிதுங்கும் குரலில்..


இவர்களைப் போலவே இந்த மூவர் டீமினால் சிக்கலை சந்தித்திருக்கும் பெரம்பலூர் மாவட்ட ஒதியம் ராமசாமி "மூவர் டீமில் மீனாட்சிந்தரமும் முத்தரசும் தமிழ்நாட்டுக்குத் தப்பி ஓடிட்டாங்க. இங்க இருந்த செண்பக குமாரையும் அவர் அண்ணன் மகன் கார்த்திகேயனையும் துபாய் போலீஸ் பிடிச்சி ஜெயில்ல அடைச்சிடிச்சி. அவங்க எப்படியோ போய்த்தொலையட்டும். என் மனைவி பரமேஸ்வரியும் என் மூணு பொம்பளைப் பிள்ளைகளும் எப்படி இருக்காங்கன்னு கூடத் தெரியலை. அவங்க அங்க கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்க.. நான்... தமிழகம் திரும்ப முடியுமான்னு தெரியாம இங்க தவிச்சிக்கிட்டு இருக்கேன்'' என்றபடி அழுதார்.


சார்ஜாவில் சிறைப்பட்டிருக்கும் தமிழர்களின் குடும்பங்கள் இங்கே எப்படி இருக்கின்றன என அறிய முதலில் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் இருக்கும் ராமசாமியின் வீட்டுக்குச் சென்றோம். 


அங்கிருந்த ராமசாமியின் மனைவி பரமேஸ்வரியை சந்தித்தோம். "சம்பாரிக்கப்போன என் வீட்டுக்காரரின் நிலைமையைப் பார்த்தீங்களா?''' என்று கதறியழ ஆரம்பித்துவிட்டார். அவரை ஆசுவாசப்படுத்திப் பேச வைத்தபோது "என் மூணு பொம்பளைப் பிள்ளைகளையும் கரை ஏத்தணும் என்பதற்காகத்தான் அவர் சார்ஜாவுக்குப் போனார். ஆனா அவர் பேர்ல அவர் வேலை பார்த்த கம்பெனி ஓனருங்க 70 லட்ச ரூபா கடன் வாங்கியிருக்காங்களாம். சார்ஜாவில் இருக்கும் வங்கியின் தமிழக ஏஜெண்டுகள் பணத்தை ஒழுங்கா திருப்பிக் கட்டிடுங்கன்னு எங்களை வந்து மிரட்டிட்டுப் போறாங்க. வாடகை வீட்டில் கஷ்ட ஜீவனம் பண்ணும் நாங்க எப்படி இந்தக் கடனை அடைப்போம்?. 100 நாள் வேலை திட்டத்தாலும் ஒரு ரூபா அரிசியாலும்தான் நாங்க இப்ப உயிர் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். எங்களை தமிழக அரசுதான் இந்த மோசடிக் கடன்கள்ல இருந்து மீட்கணும். இல்லைன்னா என் பிள்ளைகளோட நான் தற்கொலைதான் பண்ணிக்கணும்'''என்றார் அழுதபடியே.


பாடாலூரில் இருக்கும் ஜெயராமனின் வீட்டுக்கும் சென்றோம். அங்கிருந்த அவரது மனைவி விஜயகுமாரியோ, "எங்க பொண்ணு டென்த்தில் 500-க்கு 465 மார்க் வாங்கியிருக்கா. அவளை மேல படிக்கவைக்க முடியாமத் திண்டாடிக்கிட்டு இருக்கேன். என் வீட்டுக்காரர் பேர்ல சார்ஜாவில் 90 லட்சம் கடன் வாங்கப்பட்டு இருப்பதா அந்த வங்கி ஏஜெண்டுகள் ரெண்டு தடவை இங்க வந்து மிரட்டிட்டுப்போனாங்க. ஒரே திகிலா இருக்கு. என் வீட்டுக்காரர் நல்லவிதமா உயிரோட திரும்பி வந்தாலே போதும்ங்க. அதான் என்னோட பிரார்த்தனை. அதுக்கு அரசாங்கம்தான் உதவணும்' 'என்று கைகூப்பினார்.


பிழைக்க வந்த ஆட்களின் பேரில் கோடிக் கணக்கில் கடன்வாங்கி... அந்தப் பணத்தில் சென்னையில் சினிமாப் படம் எடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில்.... மன்மதக் கூத்து நடத்தி ஆட்டம் போட்டிருக்கிறதாம் இந்த மூவரணி. இது தவிர செண்பககுமார்... இந்த அப்பாவிகளின் பணத்தில் கேரளாவிலும் தமிழகத்திலும் இருக்கும் தன் இரண்டு மனைவிகளுக்கும் ஆடம்பர பங்களாக் களுடன் நவீனரக கார்களையும் வாங்கிக் கொடுத் திருக்கிறாராம். இது தவிர பெங்களூரில் இருந்து சார்ஜாவுக்கு வேலைதேடிவந்த இளம்பெண் சமந்தாவையும் செட்டப்பாக வைத்துக்கொண்டு... ஆடம்பரமாக வாழ்ந்திருக் கிறார் செண்பககுமார்.


இந்த மூவரணியின் கருத்தறிய முத்தரசுவின் 9443361111 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டோம். எதிர் முனைக் குரலோ ""முத்த ரசு பிஸி. அவர் ஃப்ரீயானதும் உங்களுடன் பேசுவார்'''என்ற பதிலையே கிளிப்பிள்ளை போல் சொன்னபடியே இருந்தது கூலாய்.


சார்ஜாவில் கடன் சுமை சுமத்தப் பட்டு சொந்த மண்ணுக்கு வர முடியாமல் தவிக்கும்... நம் தமிழக உழைப்பாளர்களை தமிழக அரசுதான் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதுவே அனைவரின் எதிர்பார்ப்பு

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.