Latest News

  

அருள்மறைக்குர்ஆனை அழகுற ஓதுவோம் வாருங்கள்..


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

الَّذِينَ آمَنُواْ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللّهِ أَلاَ بِذِكْرِ اللّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ 2813
13:28. நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.


அருள்மறைக்குர்ஆனை அழகுற ஓதுவோம் வாருங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
வெல்வெட் துணியில் மூடி பரணியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள, அல்லது அலமாரியில் அழகுப்பொருளாக ஆக்கப்பட்டுள்ள அருள்மறைக்குர்ஆனை அது இறக்கி அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்திலாவது எடுத்து ஓதி முழுமைப்படுத்தி அதன் அர்த்தம் புரிந்து அதடினப்படையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு முன்வருவோமா ?
சிந்தியுங்கள் சகோதரர்களே !
திருமறைக்குர்ஆன் மனனம் செய்து உள்ளத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக அல்லாஹ்வால் அருளப்பட்டது, திருமறைக்குர்ஆன் இருக்க வேண்டிய இடம் மனித உள்ளங்களாகும். எந்த ஒன்றும் அது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் அதனுடைய சிறப்புத் தெரியும்.
ஆன்ட்டி வைரஸ் இன்ஸ்டால் செய்யாத கணினியில் எத்தனை இலகுவாக வைரஸ் கிருமிகள் உட்புகுந்து கணினியை செயலிழக்கச் செய்து விடுகின்றதோ அதேப்போல் திருமறைக்குர்ஆன் இல்லாத உள்ளங்களில் தீமைகள் இலகுவாகப் புகுந்து உள்ளத்தைப் பாழ்படுத்தி வழிகேட்டில் ஆழ்த்தி விடுகின்றது.
இதனால் தான் பெருமானார்(ஸல்) அவர்கள் திருமறைக்குர்ஆனை சிறிதளவேனும் மனனம் செய்யாத உள்ளம் பாழடைந்த வீட்டிற்கு சமமானது என்றுக் கூறினார்;கள். நூல்: திர்மிதி
அமைதியைத் தேடி  
பலரின் உள்ளம் இன்று அமைதியைத் தேடி எங்கெங்கோ அலைவதைப் பார்க்கிறோம், எத்தனை அலைந்தாலும், என்ன விலை கொடுத்தாலும் அமைதி கிடைப்பதில்லை கிடைக்காது.
ஆனால் அமைதி கிடைக்க அருள்மறைக்குர்ஆனை ஓதி அல்லாஹ்வை நிணைவு கூறுவதைத் தவிர  வேறு வழியே இல்லை.
13:28. நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.
உள்ளம் அமைதி இழந்து அலைவதற்கு அருள்மறைக்குர்ஆனை உள்;ளத்திலலிருந்து தூரப்;படுத்தியது முக்கியக் காரணமாகும்.
 மரண வேளையிலும் 
பெருமானார்(ஸல்)அவர்கள் மரணவேதனையில் உடல்ரீதியாக கஸ்டப்படும்பொழுது ''அல்முஅவ்விதத்தைன் '' என்று சொல்லக்கூடிய சூரத்துல் ஃபலக், சூரத்துல் இக்லாஸ், சூரத்துன் னாஸ் ஆகிய அத்தியாயங்களை ஓதி தங்களின் இரு கைகளிலும் ஊதி உடல் முழுவதும் தடவிக்கொண்டு கடுமையான மரண வேதனையிலிருந்து சற்று நிவாரணம் பெற்றார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள்  நோய்வாய்ப்பட்டால், 'அல்முஅவ்விஃதாத்' (பாதுகாப்புக் கோரும் கடைசி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் மீது ஊதிக் கொள்வார்கள். அவர்களின் (இறப்பிற்கு முன்) நோய் கடுமையானபோது, நான் அவற்றை ஓதி அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே (அவர்களின் உடல் மீது) தடவிக் கொண்டிருந்தேன். நபியவர்களின் கரத்திற்குள் சுபிட்சத்தை (பரக்கத்தை) நாடியே அவ்வாறு செய்தேன்.  என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவித்தார் நூல் புகாரி: 5016.
திருமறைக் குர்ஆனின் வசனங்கள் சிறிதளவேனும் நம் உள்ளத்தில் மனனமிருந்தால் தான் நாமும் நம்முடைய மரண வேதனையில் கஸ்டப்படும்பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நடைமுறயை பின்பற்றி சற்று உடல் வேதனையை குறைத்துக் கொள்ள வசதியாக அமையும். 
மறுமையிலும் 
எந்த அருள்மறைக்குர்ஆன் உலகில் மனித உள்ளங்களை தூய்மைப் படுத்தி வழிப் பிசகாமல் நேர்வழியில் செலுத்திக் கொண்டிருந்ததோ அதே அருள்மறைக்குர்ஆன் எந்தப் பரிந்துரையும் பயன்தரமுடியாத மறுமையில் தன்னை சங்கை செய்தவர்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும் என்றுப் பெருமானார்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
'மறுமை நாளில் குர்ஆனும் அதன்படி செயலாற்றியவர்களும் அழைத்து வரப்படுவர். அப்போது 'அல்பகரா' அத்தியாயமும் 'ஆல இம்ரான்' அத்தியாயமும் முன்னே வரும்'' என்று கூறிவிட்டு, இ(வ்விரு அத்தியாயங்களும் முன்னே வருவ)தற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வரும்) மூன்று உவமைகளைக் கூறினார்கள். அவற்றை நான் இதுவரை மறந்திடவில்லை. அவ்விரு அத்தியாயங்களும் (நிழல்தரும்) மேகங்களைப் போன்று, அல்லது நடுவே ஒளியுள்ள இரு கரும் நிழல்களைப் போன்று, அல்லது அணி அணியாகப் பறக்கும் இரு பறவைக் கூட்டங்களைப் போன்று (முன்னே வந்து) தம்மைக் கையாண்டவருக்காக (இறைவனிடம்) வாதாடும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக நவ்வாஸ் பின் சம்ஆன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் முஸ்லிம் 1471
தொடர்ந்து ஓத வேண்டும்.
மனனம் செய்த திருமறைக்குர்ஆன் வசனங்களை தொடர்ந்து ஓதிக்கொண்டே இருந்தால் தான் அது உள்ளத்தில் நிற்கும். ஓதாமல் விட்டு விட்டால் அதை ஷைத்தான் வேகமாக மறக்கடிக்கச் செய்து விடுவான் என்றும், மனனம் செய்து வைத்திருந்த திருமறைக்குர்ஆனின் வசனங்களை மறந்து விடுவது வெறுக்கத்தக்கது என்றும் பெருமானார்(ஸல்)அவர்கள் கூறி எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
''இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன்'' என்று ஒருவர் கூறுவதுதான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். வேண்டுமானால், 'மறக்கவைக்கப்பட்டுவிட்டது' என்று அவர் கூறட்டும்! குர்ஆனைத் தொடர்ந்து (ஓதி) நினைவுபடுத்தி வாருங்கள். ஏனெனில், ஒட்டகங்களை விடவும் வேகமாக மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து குர்ஆன் தப்பக்கூடியதாகும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' புகாரி 5302
இரண்டு நன்மைகள்
திருக்குர்ஆனை பொருளுணர்ந்து ஓதி அதனடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அது பாவச் செயல்களிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக அமைகிறது.
அர்த்தம் தெரியாமல் சாதாரணமாக ஓதி வந்தாலும் ஒரு எழுத்துக்கு பத்து நன்மைகள் என்று ஏராளமான நன்மைகளை குவிக்கிறது. 
படிப்பினைகள்
@  இவ்வுலகில் திடகாத்திரமாக வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் தீமையின் பக்கம் சறுக்க
விடாமல் உள்ளத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதிலும்,

@  கஸ்டமான காலங்களில் உள்ளத்திற்கு அமைதியை கொடுப்பதிலும்,

@  சக்ராத் ஹால் வேதனையை குறைத்து இலகுவாக ரூஹ் பிரியச் செய்வதிலும்

@  மரணித்தப்பின் மறுமையில் இறைவனிடம் பரிந்துரை செய்வதிலும்
திருமறைக்குர்ஆன் மனிதகுலத்தின் சிறந்த வழிகாட்டியாக திகழ்வதால் அதை இயன்றவரை மனனம் செய்ய வேண்டும், அதை கைக்கெட்டும் தூரத்தில் வைத்து அடிக்கடி எடுத்து ஓதி வர வேண்டும், இயன்றளவு அர்த்தம் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இதுவே திருக்குர்ஆனுக்கு நாம் செய்யும் சங்கையாகும்.
எழுதியபடி நாமும், வாசித்தபடி நீங்களும் அமல் செய்யக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !
   
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.