Latest News

  

சிரித்து வாழ வேண்டும்-பிறர் சிரிக்கவும் வாழ வேண்டும்!

http://mudukulathur.com/?cat=12


புனித ரமலான் மாதத்திய நோன்பு பசித்தவர் படும் பாட்டினை பாருக்கு உணர்த்தும் ஒரு நடைமுறை. பல் வேறு மதங்களிலும், அரசியல் மற்றும் சமூக கிளர்ச்சியிலும் கடைப்பிடிக்கும் உண்ணா நோன்பு வெறும் திடப்பொருளை மட்டும் ஒதுக்கும் ஒரு செயலாகும். ஆனால் தவிக்கும் வாயிக்குக் கூட பட்டிணிபோட்டு வறியவர் படும் துன்பத்தினை வள்ளலுக்கும் உணர்த்தும் அரிய ஒரு மகத்துவம் புனித ரமலான் நோன்பு ஆகும். ஈகையினை உள்ளத்தில் உதிக்கச் செய்து எப்படி பாலைவனத்தின் மணலைத் தோண்டும் போது நீர் சுரக்குகிறதோ அதே போல இல்லாதவருக்கு ஜக்காத், சதக்கா போன்ற கொடையினை அள்ளி அள்ளி வழங்கத் தூண்டும் ஒரு சிறந்த பண்பான கடமைதான் நோன்பு.

ஆனால் எத்தனை வள்ளல்கள் தனது செல்வங்களை ஏழை, எளியவர்க்கு வாரி வழங்குகிறார்கள்? நமது சமுதாயத்தில் செல்வந்தர்கள் இல்லையா? ஏன் சகர் நேர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்போமேயானால் தங்க நகைகடை, ரியல் எஸ்டேட்ஸ், லாட்ஜ், துணிக்கடைகள், சூப்பர் மார்க்கட்டுகள், கோரியர் சர்வீஸ்கள், குடிதண்ணீர் சப்ளை செய்யும் நிறுவனம், பொது விளம்பரத்தில் தடுக்கப்பட்ட பீடி-பாக்கு நிறுவனங்கள், தங்களுக்குத் தாங்களே டாக்கடர் பட்டம் சூட்டிக்கொள்ளும் யுனானி மருத்துவ மாமணிகள், கல்வி நிறுவனம் நடத்தும் வள்ளல்கள் போன்ற செல்வந்தர்கள் பட்டியல் வரிசை நீண்டு கொண்டே போகிறது..

சகர் நேரத்தில் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் கால் வாசி விளம்பரங்கள் முக்கால்வாசி என்று சொல்லும் அளவிற்கு விளம்பரம் செய்யும் செல்வந்தர்கள் நம்மிடையே இல்லாமலில்லை. ஆனால் அவர்கள் நோன்பு நேரத்தில் தங்கள் செல்வத்தினை கணக்கிட்டு ஜக்காத், சதக்கா கொடுக்கிறார்களா என்றால் சந்தேகமே! அவர்கள் கொடுப்பதெல்லாம் நோன்பு நேரத்தில் கையேந்துபவர்களுக்கு காசு, குறைந்த விலையில் துணிமணிகள் எடுத்துக் கொடுத்து வெறும் தர்மம் செய்ததாக ஜம்பம் அடிப்பார்கள். அது தான் உண்மையிலே ஏழைகளுக்குச் செய்யும் தொண்டா?

ஓரு உண்மை சம்பவத்தினை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நான்கு வருடத்திற்கு முன்பு சென்னையில் வாழும் எனது தூரத்து அட்வகேட் உறவனர் மகள் பிளஸ்2 பரீட்சையில் 1200 மார்க்குக்கு 1148 மார்க் வாங்கி பள்ளியிலே முதலாவதாகத் தேறியிருந்தார். அந்தப் பெண்ணுக்கு அதிக கட்டாப் மார்க் இருப்பதால் நிச்சயம் அரசின் ஒதுக்கீடிலே நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். ஆனால் அவள் ஒரு முஸ்லிம் இன்ஜினீரியங் கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என தீர்மானித்து அந்தக்கல்லூரிக்கும் மனு செய்தார். இண்டர்வியூக்கும் தந்தையினைக் கூட்டிச் சென்றாள். ஆனால் அங்கு கேட்கப்பட்ட கேள்வி நீங்கள் எத்தனை லட்சம் டொனேசன் தருவீர்கள்? என்பது தான். அந்தப் பெண்ணின் தந்தையே என்மகள் நல்ல மார்க்கில் தேர்வாக உள்ளாள் அவள் மற்ற கல்லூரிக்கு அரசு ஒதுக்கீடு இலவச சீட்டில் செல்வதிற்குப் பதிலாக முஸ்லிம் கல்லூரியில் படிக்க விரும்புகிறாள் ஆகவே அவளுக்கு ஃபிரீ சீட் தாருங்கள் என்று சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் பல லட்சம் டொனேசன் கேட்டதால் அதனை மறுத்துவிட்டு அரசு ஒதுக்கீடு செய்த வெங்கடேஸ்வரா இன்ஜினீரயங் கல்லூரியில் சேர்ந்து முதல் வகுப்பிலும் தேரி டி.சி.எஸ். சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளாள.. இது எதனைக் காட்டுகிறது.? ஏழை முஸ்லிம்களுக்காக மைனாரிட்டி கல்லூரி நடத்துகிறோம் என்று லட்சத்தில் பணம் அள்ளும் முதலைகளாக அந்த வள்ளல்கள் இருக்கின்றார்கள். ஆனால் விளம்பரம் மட்டும் விமரிசையாக வள்ளல் என போட்டு நோன்பின் மாண்பு-மகிமையினை பாழடிக்கிறார்கள் என்றால் மிகையாகுமா?

அமெரிக்காவில் வாழும் இந்திய தமிழ் முஸ்லிம்கள் ஆண்டு தோறும் ஒரு ஏழை முஸ்லிம் கிராமத்தினை தத்தெடுத்து அவர்களுக்கு தொழில் வைத்து முன்னேற ரூ10000 வீதம் 100 குடும்பங்களுக்குக் கொடுத்து தன்னிறைவு பெற உதவுகிறார்கள். அது போன்று ஏழைக் குடும்பங்கள் முன்னேற எதாவது நிலையான திட்டங்கள் எவராலும் செய்யப்பட்டுள்ளதா? நகை வியாபாரிகள் நூறு ஏழைக்குமர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குமருக்கும் ஒரு பவுன் தாலிச் செயின் மற்றும் திருமண செலவுகளை ஏற்றுக் கொண்டு அவர்களுடைய திருமணத்தினை நடத்தித் தரக்கூடாது?

மைனாரிட்டி கல்வி நிறுவனங்களில் சிறப்பான கல்வித் தகுதியுள்ள மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ்-டெப்டி கலெக்டர்-டி.எஸ்.பி பரீட்சை எழுத பயிற்சி அளிக்கக்கூடாதா? எப்படி முன்னாள எம்.எல்.ஏ சைதை துரைசாமி மட்டும் அவ்வாறு இலவச பயிற்சி கொடுத்து வருடா வருடம் 100க்கு குறையாத மாணவர்களை முதன்நிலைத் தேர்வில் வெற்றி பெறச் செய்ய முடிகிறது?

ஏன் குடி தண்ணீர் சப்ளை விளம்பரம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு கேன்கள் குடி தண்ணீர் தங்கள் பகுதியிலிருக்கும் பள்ளி-மதரஸாவிற்கு இலவச தண்ணீர் சப்ளை செய்யக்கூடாது? அதுபோல் கூரியர் சர்வீஸ்-டிராவல்ஸ்-ஹோட்டல்ஸ் நடத்தும் உரிமையாளர்கள் அரசு பரிட்சை எழுத வரும் மாணவர்கள் தங்கி பரீட்சை எழுத இலவசமாக வாகனம்-இடம் கொடுக்கக்கூடாது? டீ.வி. நிகழ்ச்சியில் ஒரு விளம்பரப்பிரியர் நீங்கள் அரிசி கொண்டு வாருங்கள் நாங்கள் உமி கொண்டு வருகிறோம் நாம் சமைத்துசாப்பிட ‘பைத்துல்மால்’ அமைப்பினை ஏற்படுத்தி தங்களுடைய முகங்களை பலருக்கு பளிச்சென்று வெளிச்சம் போட்டு பறையடிக்கிறார். அதுதான் இஸ்லாம் சொன்ன தான தர்மமா?


உதவும் கரஙகள் எப்படி இருக்க வேண்டும் என்பதினை; இரண்டு சம்பவங்களினை மட்டும் உங்களுக்கு உதாரணமாக எடுத்துக்காட்டலாம் என நினைக்கிறேன்:

1) கீழே உள்ள படத்தில் கனடா நாட்டு பிரதமர் மார்ட்டினுடன் தலை நிமிர்ந்து நிற்கும் சிறுவன் யார் தெரியுமா ‘யூனிசெப்’ ஜக்கிய நாடு குழைந்கைகள் படிப்பு- சுகாதாரம் பாதுகாப்பிற்கான ஒரு சபையாகும். அந்த சபையால் கவுரவ அம்பாசாடர் என்ற பட்டம் வழங்கப்பட்ட கனடா நாட்டு இந்திய வம்சா வழி பதிமூன்றே வயதான அம்மான் என்ற தந்தைக்கும், சமீம் என்ற தாய்க்கு மகனாகப் பிறந்த அருந்தவப் புதல்வன் தியாகச் செம்மல் ஹஜரத் பிலால் அவர்கள் பெயரைத் தாங்கியவன். அவன் அப்படியென்ன அருஞ்செயல் செய்தான் என நீங்கள் கேட்க உங்கள் ஆவல் தூண்டும். இந்திய நாட்டில் குஜராத்தில் புர்ஜ் நகரினை சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அல்குர்ஆனில் சொன்னது போல புரட்டிப்போட்டு மாடி வீடுகளெல்லாம் மண்ணாகி பலர் மடிந்தும் போன கதை பலர் அறிந்திருப்பீர்கள். அப்போது கனடா தலைநகர் டொரனடாவில் வசித்த அந்தச் சிறுவனுக்கு வயது நான்குதான். அந்த பூகம்பத்தினை தொலைக்காட்சியில் ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் அதிர்ச்சியிட்டு மிகவும் துயரம் அடைந்தான்.

அன்றிலிருந்து அவன், அவனது பொற்றோர் மற்றும் பாட்டனாருடன் தெருவில் இறங்கி ஆரஞ்சு பழங்கள் விற்று அதன் மூலம் கிடைத்த 332 டாலர்களை யூனிசெப் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தான். அதன்பிறகு எட்டு வயதான போது 2004 ஆம் ஆண்டு ஹெயிட்டி நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரலையின் போது தன் தந்தையின் ரொட்டிகளை எடுத்து தெரு தெருவாக விற்று அதில் கிடைத்த வருமானத்தினை அந்த நாட்டுக் குழந்தைகளுக்கு அனுப்பியுள்ளான். அதன்பின்பு ஆப்பிரக்கா நாட்டு குழந்தைகள் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிந்து காகித தட்டுகளை செய்து விற்று அதன் மூலம் கிடைத்த 1100 டாலர்களை அந்தக் குழந்தைகளுக்கு அனுப்பியுள்ளான். இது போன்ற உதவிகளை செய்ய ‘ஹேண்ட் பார் ஹெல்ப்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினை நிறுவியும் உள்ளான். 2009ஆம் அண்டு ‘கால் நடை இயக்கம் ஒன்றை’ ஆரம்பித்து தன் பள்ளித் தோழர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுடன் கனடா தலைநகர்டொரண்டோவில் உள்ள பூங்கா, சூப்பர் மார்க்கட், கல்வி நிறுவனங்களுக்கு கால் நடையாக சென்று வசூலித்து அதனை உலக குழந்தைகள் கல்வி, சுகாதாரம், பசி, பட்டிணி போக்க உதவியும் உள்ளான். அவன் அளித்த உதவித் தொகை எவ்வளவு தெரியுமா சொந்தங்களே? 5மில்லியன் டாலர் தொகையாகும். தற்போது அடில்லாலானி என்ற 20 வயது வாலிபருடன் சேர்ந்து சுடோகோ.காம் என்ற விளம்பர இணைய தளத்தினை ஆரம்பித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தினை ‘வோல்ட் புட் பரோகிராம்’ அதாவது உலக உணவுக்கழகத்தின் பசி போக்கும் திட்டத்திற்கு உதவி வருகிறான் என்றால் பாருங்களேன். ஒரு முஸ்லிம் சிறுவனால் செய்ய முடிந்ததினை நான் மேற்கோடிட்டுக் காட்டிய செல்வந்தர்களால் ஏன் முடியாது முஸ்லிம் ஏழை மக்களுக்கு, ஏழை குமர்களுக்கு, அனாதை சிறுவர்களுக்கு, அறிவுசால் மாணவர்களுக்கு வாழ்வில் ஓளியேற்ற?

அடுத்த ஒரு சம்பவத்தினையும் உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன் சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டில் வெள்ளம் ஏற்பட்டு 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு 2000 பேர் இறந்தும், 1.கோடியே எழுபது லட்சம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதினை தினந்தோறும் பத்திரிக்கை-எலக்ரானிக் மீடியாக்கலில் பார்த்து-படித்து தெரிந்திருப்போம். அந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நாட்டு ஜனாதிபதி ஆசிப் சர்தாரி கட்சியும், எதிர்கட்சியான எம்.க்யூ.எம் சட்சிகள் செய்த உதவி தலா 5 மில்லியன் டாலர் மட்டுமே, ஆனால் ஹாலிவுட் நடிகை ஆஜ்லினா ஜோஸி செய்த உதவி 8 மில்லியன் டாலர் ஆகும். சொந்த நாட்டினர் தனிப்பட்டு செய்த உதவியினை விட ஒரு தனிப்பட்ட அயல் நாட்டுப் பெண் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்தாளென்றால் ஏன் கோடி கோடியாக பணம் வைத்திருக்கும் செல்வந்தர்கள் நோன்பு நேரத்தில் கூட இது போன்ற உதவியினைச் செய்யக்கூடாதா என்பதே என் ஆதங்கம். ஆகவே தான் நாம் மட்டும் மகிழ்வுடன் இருக்கக்கூடாது மற்றவர்களையும் மகிழ்விக்க வேண்டும் என்பதினை வலியுறுத்தி இந்தக்கட்டுரை எழுதினேன்.

நன்றி : AP,Mohamed Ali

தகவல் : அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.