
பொங்கல் தினத்தன்று வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி, அந்த நாளை கறுப்பு
தினமாகக் கடைப்பிடிக்கப்போவதாகத் தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சேர்ந்த
உழவர் உழைப்பாளர் கட்சியினர் மற்றும் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியாளர்கள்
சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
சேலம்
சாமுண்டி வளாகத்தில் உள்ள லட்சுமி அரங்கத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தை
சேர்ந்த உழவர் உழைப்பாளர் கட்சி, மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியாளர்
சங்கத்தினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய உழவர்
உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து, '' சேலம், நாமக்கல்
மாவட்டத்தில் உள்ள மரவள்ளிக் கிழங்கு ஆலைகளில் சுத்திகரிக்கப்படாமல் கழிவு
நீரை வெளியேற்றுகிறார்கள்.
இதனால் விவசாய நிலங்கள் பாதிப்படைவதோடு, நிலத்தடி நீரும் கெட்டுவிடுகிறது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம், அனுமதி பெறாமல் மரவள்ளிக் கிழங்கு
ஆலைகள் செயல்படுகின்றன. சில ஆலைகள் மரவள்ளி மாவுடன், பல ரசாயனங்களையும்,
கல் மாவு, சாக்பிஸ் மாவு, மக்காச்சோள மாவு ஆகியவற்றை கலப்படம்
செய்கிறார்கள். மனிதர்களுக்கு ஆபத்துகளை விளைவிக்கும் இதை அரசு தலையிட்டு
தடுத்து நிறுத்த வேண்டும்.
மரவள்ளி விவசாயிகளை உறுப்பினர்களாக்கி
கரும்பு ஆலைபோல் குளுக்கோஸ் தயாரிக்கும் ஆலைகளை நிறுவ வேண்டும்.
விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு விவசாயக் கல்லூரியில்
முன்னுரிமை தர வேண்டும். சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம்
கொடுத்த விவசாயிகளுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையைக் கொடுக்க வேண்டும்.
20 ஆண்டுகளாக 20 லட்சம் விவசாயிகள் மின்சார வசதி கேட்டும் கொடுக்காமல்
இழுத்தடிக்கிறார்கள். அவர்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும். ஏரி,
குளங்களில் நிபந்தனையின்றி மண் அள்ளுவதற்கு அனுமதிக்க வேண்டும். தென்னை
மரத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும். பால் ஒரு லிட்டர் 50 ரூபாயாக
விலை உயர்த்த வேண்டும்.
தமிழக விவசாயிகளின் நிலுவைத் தொகையாகத்
தனியார் சக்கரை ஆலையில் ரூ.1500 கோடியும், கூட்டுறவு ஆலைகளில் ரூ.200
கோடியும், பொதுத்துறை ஆலைகளில் ரூ.50 கோடியும் மொத்தம் ரூ.1,750 கோடியும்
பொங்கலுக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் வரும் பொங்கல் தினத்தை,
விவசாயிகள் கறுப்பு தினமாக கடைப்பிடித்து வீடுகளில் கறுப்புக் கொடி
ஏற்றுவோம். கரும்பின் விலை டன்னுக்கு ரூ.4,000 ஆகவும், நெல் குவிண்டாலுக்கு
ரூ.3,000-மும், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆகவும், மரவள்ளிக்
கிழங்கு டன்னுக்கு ரூ.15,000-மாகவும் அறிவிக்க வேண்டும். இந்த அரசு,
பணத்தைக் கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆளும் அ.தி.மு.க
அரசு ஆட்சியையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் பாதுகாப்பதில் காட்டும்
அக்கறையை, மக்களைப் பாதுகாப்பதில் காட்டவில்லை'' என்றார்.
No comments:
Post a Comment