
இ ந்திய அளவில்
தற்போது 16 மாநிலங்களில் தனித்தும், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்தும்
ஆட்சியில் இருப்பது பி.ஜே.பி. அண்மையில் குஜராத், இமாச்சலப் பிரதேச
மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடி,
நாடு தழுவிய அளவில் தனக்கான மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்திக்
கொண்டிருக்கிறது அக்கட்சி.
குஜராத்தில் வெற்றிபெற்றதன் மூலம்
தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக ஆட்சியமைத்த பெருமை பி.ஜே.பி-க்குக்
கிடைத்துள்ளது. எனினும், மற்ற தேர்தல்களை விடவும், இந்தமுறை குஜராத்
சட்டப்பேரவைத் தேர்தல் முன்னெப்போதும் இல்லாதவகையில் மிகுந்த பரபரப்பையும்,
எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
அதற்குக் காரணம் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால்தான்.
தவிர, 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்பதாகவும்
பார்க்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, காங்கிரஸ்
கட்சியின் அப்போதைய துணைத் தலைவரும், இப்போது கட்சித்தலைவருமான
ராகுல்காந்தி தீவிரச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தை
முடுக்கி விட்டார். அதனை எதிர்கொள்ளும்வகையில், பி.ஜே.பி-யும், பிரதமர்
மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் படையும் களமிறங்கி பிரசாரம் மேற்கொண்டு
வெற்றியும் பெற்று விட்டனர்.
ஆனால், குஜராத்தில் மீண்டும் விஜய்
ரூபானி தலைமையில் அமைந்த ஆட்சி ஐந்தாண்டுகள் நீடிக்குமா என்ற கேள்வியெழும்
வகையில் அண்மைக்கால நிகழ்வுகள் அமைந்துள்ளன. முதல்வருக்கு எதிராக துணை
முதல்வர் நிதின் படேல் போர்க்கொடி உயர்த்தியதைத் தொடர்ந்து, மேலும் ஓர்
அமைச்சர் அதே விவகாரத்தில் தன் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
ஏற்கெனவே,
தான் வகித்த நிதி இலாகாவை வழங்காததால் கடந்த சில தினங்களுக்கு முன்
அதிருப்தியடைந்து கருத்துத் தெரிவித்த துணை முதல்வர் நிதின் படேலுக்கு
மீண்டும் நிதித்துறை வழங்கப்பட்டது. படேல் எதிர்ப்பைத் தொடர்ந்து,
பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா தலையிட்டு மீண்டும் நிதித்துறையை நிதின்
படேலுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, நிதின் படேலுக்கு நிதி
இலாகா வழங்கியதுடன் குஜராத் அரசுக்குப் பிரச்னை முடிந்தது என்று பி.ஜே.பி.
கருதியது. ஆனால், அடுத்த சில தினங்களிலேயே மற்றோர் அமைச்சர் போர்க்கொடி
தூக்கியது, பி.ஜே.பி-க்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்
ரூபானி தலைமையிலான அமைச்சரவையில் மீன்வளத்துறை இணையமைச்சராக புருஷோத்தம்
சோலங்கி உள்ளார். இவர், தனக்கு வழங்கப்பட்டுள்ள மீன் வளத்துறை
இலாகாவுக்குப் பதிலாக கேபினட் அந்தஸ்துடன் கூடிய முக்கியமான வேறொரு இலாகா
ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது பி.ஜே.பி மற்றும் குஜராத் முதல்வரை
அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மீன்வளத் துறையை ஏற்கெனவே வகித்துள்ள
புருஷோத்தம் சோலங்கி மீது, ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. மீன்பிடி
ஒப்பந்தங்கள் வழங்கியதில் 400 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேட்டில்
ஈடுபட்டதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து,
வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு காந்திநகர் நீதிமன்றத்தில்
நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் விஜய்
ரூபானியை அவரின் அலுவலகத்தில் இரு தினங்களுக்கு முன் சந்திக்க வந்த சோலங்கி
பத்திரிகையாளர்களிடம், "எனக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த
இலாகா வழங்க வேண்டும். நான் சார்ந்துள்ள கோலி சமுதாயத்தினர் 45 பேர்
எம்.எல்.ஏ-க்களாக உள்ளனர். 1998-லிருந்து நான் என் தொகுதியில் எம்.எல்.ஏவாக
வெற்றிபெற்று வருகிறேன். ஆனால், எனக்கு மீன்வளத்துறை போன்ற மிகவும் சாதாரண
இலாகாக்களே ஒவ்வொரு முறையும் ஒதுக்கப்படுகின்றன. கேபினட் அந்தஸ்தில்
முக்கியமான துறை எனக்கு ஏன் ஒதுக்கப்படவில்லை என்று நான் சார்ந்துள்ள
சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்கிறார்கள்." என்றார். இப்பிரச்னை
தொடர்பாக முதல்வரைச் சந்தித்துப் பேசுவதற்காகவே வந்ததாகத் தெரிவித்த அவர்,
முதல்வருடன் விரிவாகப் பேச முடியவில்லை என்றார்.
மேலும்
"இப்பிரச்னையில் முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், 2019-ம்
ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கோலி சமுதாயத்தினரின் கோபத்திற்கு பி.ஜே.பி.
ஆளாக நேரிடும். என்னைப் பொறுத்தவரை மீன்வளத்துறை ஒதுக்கியதில் எனக்கு
அதிருப்தியில்லை. ஆனால், நான் சார்ந்துள்ள சமுதாயத்தினர் மற்றும் தலைவர்கள்
இப்பிரச்னையில் மிகுந்த கோபமடைந்துள்ளனர். என் கோரிக்கை குறித்து
பரிசீலிக்காவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு அளிக்கும்
ஆதரவைத் தொடர்வது குறித்து எங்கள் சமூகத்தினர் மறுபரிசீலனை செய்ய
வேண்டிவரும்" என்றார்.
மேலும்
முதல்வர் விஜய் ரூபானி மீதும் சோலங்கி குற்றச்சாட்டுகளை வைத்தார்.
"முதல்வரிடம் மொத்தம் 12 இலாகாக்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான சில
துறைகளை அவர் ஏன் பிற அமைச்சர்களிடம் அளிக்கக் கூடாது?" என்று கேள்வி
எழுப்பினார்.
"நான் முதல்வரைச் சந்தித்து இலாகா ஒதுக்கீடு
தொடர்பான என் அதிருப்தியைத் தெரிவிக்கவே வந்தேன். ஆனால், அவரைச் சந்திக்க
ஏராளமானோர் காத்திருந்ததால் அவருடன் என்னால் பேச முடியவில்லை. என்னை
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவதாகவும், நான்கு அல்லது ஐந்து நாள்களில்
சந்திப்பதாகவும் முதல்வர் கூறினார்" என்றார் அவர்.
இதுபோன்று
அமைச்சர்கள் அதிருப்தி வெளியிடுவது கவலையளிப்பதுடன், அரசின் மீது
எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தி விடும் என்று விஜய் ரூபானி தெரிவித்ததாக
மூத்த அமைச்சர் பூபேந்திர சிங் சூடாஸ்மா தெரிவித்தார். இந்தக்
குற்றச்சாட்டைத் தொடர்ந்து, சோலங்கியைச் சமாதானப்படுத்தும் முயற்சியில்
பூபேந்திரசிங் சூடாஸ்மா ஈடுபட்டார்.
சோலங்கியைச் சந்தித்துப் பேசிய
பின் செய்தியாளர்களிடம் பேசிய பூபேந்திர சிங், "எங்கள் கட்சியும்,
ஆட்சியும் ஜனநாயக அடிப்படையிலானது. சோலங்கி அவருடைய கருத்தைத்
தெரிவித்துள்ளார். அதற்கு அவருக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. 'அவரின்
கோரிக்கை பற்றி, அடுத்த அமைச்சரவை மாற்றத்தின்போது பரிசீலிக்கப்படும்'
என்று சோலங்கியிடம் முதல்வர் விஜய் ரூபானி தொலைபேசியில் தொடர்புகொண்டு
உறுதியளித்துள்ளார்" என்றார்.
குஜராத்தில் படேல் சமுதாயத்தைப் போன்று மிகவும் பலம் வாய்ந்ததொரு சமுதாயமாகத் திகழ்வது கோலி சமுதாயம். இந்த சமுதாயத்தைச் சேர்ந்த சோலங்கி, நான்கு முறை எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றுள்ளார். அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரின் சகோதரரான ஹிராபாய் ஏற்கெனவே எம்.எல்.ஏ-வாக இருந்தவர். ஆனால், இவர் அண்மையில் முடிவடைந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.
குஜராத்தில் படேல் சமுதாயத்தைப் போன்று மிகவும் பலம் வாய்ந்ததொரு சமுதாயமாகத் திகழ்வது கோலி சமுதாயம். இந்த சமுதாயத்தைச் சேர்ந்த சோலங்கி, நான்கு முறை எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றுள்ளார். அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரின் சகோதரரான ஹிராபாய் ஏற்கெனவே எம்.எல்.ஏ-வாக இருந்தவர். ஆனால், இவர் அண்மையில் முடிவடைந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.
ஏற்கெனவே இந்தமுறை குஜராத்
தேர்தலில், முந்தைய சட்டசபையில் இருந்த உறுப்பினர்களைக் காட்டிலும் குறைவான
எண்ணிக்கையிலேயே அதாவது 99 எம்.எல்.ஏ-க்களே பி.ஜே.பி-க்குக் கிடைத்தது.
மேலும் பல தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் மிகவும் சொற்ப
வாக்குகளிலேயே தோற்றதும், பி.ஜே.பி-யை கலக்கத்தில் ஆழ்த்தியது.
இத்தகைய
சூழலில் குஜராத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பி.ஜே.பி. ஆட்சி நீடிக்குமா
என்ற கேள்வியும் எழாமல் இல்லை. கேசுபாய் படேல் தலைமையில் பி.ஜே.பி. ஆட்சி
இருந்தபோது, சங்கர் சிங் வகேலா கட்சியை உடைத்த வரலாறும் குஜராத்திற்கு
உண்டு.
பீகார் போன்ற மாநிலங்களில் பி.ஜே.பி. மேற்கொண்ட நிலைப்பாடு
குஜராத்தில் ஏற்படாமல் இருந்தால் சரி. உஷாராகிக் கொள்ளுமா பி.ஜே.பி. என்பதே
அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
குஜராத் சூழல் பற்றி
கருத்துக் கேட்க பி.ஜே.பி.யின் தமிழக நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ள முயற்சி
செய்தோம். ஆனால், யாரும் தொலைபேசி இணைப்பில் கிடைக்கவில்லை.
No comments:
Post a Comment