
பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் கவிழ்ந்த துபாய் சரக்கு கப்பலில் பயணித்த 3
தமிழர்கள் உட்பட 10 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
'எமரால்டு கோல்டு' என்கிற துபாய் சரக்குக் கப்பல் இந்தோனேஷியாவில் இருந்து
களிமண் ஏற்றிக்கொண்டு சீனா செல்லும் போது பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில்
கவிழ்ந்தது. இதில் 26 இந்தியப் பணியாளர்கள் இருந்தனர்.
இவர்களில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது 16 பேர்
மீட்கப்பட்டுவிட்ட நிலையில் எஞ்சியுள்ள 10 பேரை தேடும் பணி நடைபெற்று
வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் விமானங்களும், கப்பல்களும் இந்த தேடுதல் பணியில்
ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே மீட்கப்பட்ட 16 பேரில் 11 பேர் ஷியாமென்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை இந்திய தூதரக அதிகாரிகள்
நேரில் சென்று சந்தித்தனர்.
மீட்கப்பட்ட 5 பேரை மணிலாவில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வர ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளதாகவும், தேடுதல் பணி விரைவில் முடிவடையும் என்றும் இந்திய
வெளியறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது ட்விட்டர்
பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சரக்குக் கப்பலில் அதிகாரிகளாக பணிபுரிந்த வந்த தமிழகத்தைச் சேர்ந்த 3
பேர் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கோவையைச் சேர்ந்த கிரிதர்
குமார், புன்னைக்காயலைச் சேர்ந்த பெவின் தாமஸ் ஆகியோரை மீட்டுத் தரக் கோரி
அவர்களது பெற்றோர் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

No comments:
Post a Comment