நாமக்கல் ஒப்பந்ததாரரும் சுகாதாரத்துறை அமைச்சரின் நெருங்கிய
நண்பருமான சுப்ரமணியன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்த வழக்கு
விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரி சோதனை
நடைபெற்ற போது நாமக்கலை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரரும் அமைச்சரின்
நெருங்கிய நண்பருமான சுப்ரமணியனின் வீட்டிலும் வருமான வரி சோதனை
நடத்தப்பட்டது.
அப்போது சுப்ரமணியன் வெளிநாடு சென்றிருந்ததால் நாடு திரும்பியதும் வருமான
வரி அலுவலகத்தில் ஆஜரானார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி
செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் சுப்ரமணியன் மர்மமான
முறையில் உயிரிழந்தார்.
தற்கொலையா.. மாரடைப்பா
முதலில் தற்கொலை என்றும், பின்னர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகவும்
கூறப்பட்ட நிலையில் தந்தை மரணத்தில் மர்மம் இருப்பதாக சுப்ரமணியத்தின் மகன்
சபரீசன் அளித்த புகாரின் பேரில் சுப்ரமணியன் மரணத்தை மோகனூர் போலீசார்
விசாரணை நடத்தி வந்தனர். நேற்று விழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர்
மாற்றப்பட்ட நிலையில் தற்கொலை செய்யப்பட்ட சுப்ரமணியம் 18 துறைகளுக்கு
எழுதிய 4 பக்க கடிதம் கைபற்றப்பட்டது.
தொழில் போட்டி காரணமா?
கடிதத்தில் பிரபல கான்ட்டிராக்டர் ஒருவர் தொழில் போட்டி காரணமாக தேவையின்றி
தனது பெயரை சிக்க வைத்து தொழில் செய்ய முடியாமல் செய்து விட்டதாகவும்,
இதனால் மிகவும் நொந்து போய் உயிரை விடத் துணிந்ததாகவும் கடிதத்தில்
எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் கடிதத்தின் ஓரத்தில் உறவினர் மற்றும்
வருமான வரி அலுவலர் ஒருவரும் தான் தனது தற்கொலைக்கு காரணம் என்றும்
சுப்ரமணியன் தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு மாற்றம்
மோகனூர் காவல் ஆய்வாளர் வழக்கை விசாரித்து வந்த நிலையில் நாமக்கல் மாவட்ட
கூடுதல் சூப்பிரண்டு செந்தில் இந்த வழக்கை விசாரிக்க மாவட்ட போலீஸ்
சூப்பிரண்டு மகேஷ்வரன் உத்தரவிட்டார். இதனையடுத்து செந்தில் நேற்று
சுப்ரமணியனின் வீடு, தோட்டம் மற்றும் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர்
வலியுறுத்திய நிலையத்தில் சுப்ரமணியன் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு
மாற்றப்பட்டுள்ளது.
உண்மை வெளிவருமா?
சிபிசிஐடி விசாரணையின் போது சுப்ரமணியன் எழுதிய கடிதத்தில் உள்ள உண்மைத்
தன்மை மற்றும் கடிதத்தில் தனது தற்கொலைக்கு முக்கிய காணரம் என
குறிப்பிட்டுள்ள பிரபல கான்ட்டிராக்டரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று கடிதத்தின் ஓரத்தில் தற்கொலைக்கு
காரணம் என குறிப்பிட்டிருந்த உறவினர் மற்றும் ஐடி அதிகாரியிட்மும் விசாரணை
நடத்தி உண்மை வெளிக்கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment