உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகள் சிதறியதாலேயே அவர்கள்
பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் கூட பாஜக வெற்றி பெற முடிந்துள்ளது.
உ.பி.யில் இரு சிறு கட்சிகள் கூட்டணியோடு களமிறங்கிய பாஜக, மொத்தமுள்ள 403
தொகுதிகளில் 324 தொகுதிகளை வென்று, மாபெரும் வெற்றியை ருசித்துள்ளது.
சுமார் 20 சதவீதம் முஸ்லிம் மக்கள் தொகையை கொண்ட உ.பி.யில் பாஜக சார்பில்
ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட களமிறக்கப்படவில்லை. அப்படியும் அந்த கட்சி
வென்றது அரசியல் ஆய்வாளர்களை ஆச்சரியப்பட வைத்தது.
வாக்கு பிரிவு
இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் ஆய்வுகள் நடத்தி வருகிறார்கள். முஸ்லிம்
வாக்குகள் பிரிந்ததுதான் பாஜகவின் அபார வெற்றிக்கு காரணம் என்றும், ஜாதி
வாக்குகளை மிக லாவகமாக பாஜக பிடித்துக்கொண்டது மற்றொரு காரணம் என்றும்
கண்டறிந்துள்ளனர், அரசியல் பண்டிதர்கள்.
மத பிரச்சினை
மத பிரச்சினைக்கு பெயர் வாங்கியது உ.பி., அயோத்தி ராமர் கோயில் பிரச்சினை,
பாபர் மசூதி இடிப்பு ஆரம்பித்து, முசாபர்நகர் கலவரம் வரையில்,
இந்து-முஸ்லிகள் நடுவே நீறுபூத்த நெருப்பாக பிரச்சினை நீடித்து வரும் பூமி
இது. ஆனால், முசாபநகர் நகர் பகுதியில் உள்ள மீராபூர் தொகுதி உட்பட
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளிலும் பாஜக வென்றுள்ளதற்கு
காரணம், வாக்கு சிதறல்தானாம்.
எதிர்க்கட்சிகள் அதிக வாக்கு
சர்தானா தொகுதியில் போட்டியிட்ட பாஜக நிர்வாகியும், முசாபர் நகர்
கலவரத்தில் குற்றவாளியாக கூறப்படுபவருமான சங்கீத் சோம், 97921 வாக்குகள்
பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்ததாக சமாஜ்வாதி கட்சியின் அதுல்
பிரதான் 76 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார். 3வது இடத்தை பிடித்த பகுஜன்
சமாஜ் கட்சி வேட்பாளர் குரைஷி 57,239 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகியவை இரண்டும் பெற்ற வாக்குகள், பாஜக
வேட்பாளரைவிட அதிகம். ஆனால் முஸ்லிம் வாக்குகள் இரண்டாக பிரிய, இந்து
மக்கள் வாக்குகள் பாஜகவுக்கு மட்டும் கிடைத்துள்ளது.
குழப்பம்
பாஜகவுக்கு மாற்றாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் இஸ்லாமியர்கள் நடுவே
ஏற்பட்ட குழப்பம், இந்துக்கள் வாக்குகளை மொத்தமாக ஈர்த்தது என பாஜக அபார
வெற்றிபெற காரணங்கள் இவைதான். பீகாரை போல பாஜகவுக்கு எதிராக அனைத்து
பிராந்திய கட்சிகளும் இணைந்து உ.பியிலும் போட்டியிட்டிருந்தால் பாஜக
ஆட்சியை பிடித்திருக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் அரசியல்
நோக்கர்கள்.

No comments:
Post a Comment