Latest News

தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது பேரதிர்ச்சி - விஜயகாந்த்

 
தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலர் அறையில் 10 பேர் கொண்ட குழு சோதனையிடுகிறது என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு சம்பவமாக தற்போது பொறுப்பில் இருக்கும் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வீட்டில் அவருடன் சம்மந்தபட்ட 13 இடங்களிலும் காலை முதல் வருமான வரி துறையினர், மத்திய ராணுவப்படை, அமலாக்க பிரிவு மற்றும் சி.பி.ஐ. துணையோடு சோதனை நடத்துகின்றனர் என்ற செய்தி ஆட்சியாளர்கள் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் அனைவருக்கும் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கெல்லாம் ஒரு படி மேலாக தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலர் அறையில் 10 பேர் கொண்ட குழு சோதனையிடுகிறது என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோதனை நடத்தும் மத்திய அரசோ நம்பத்தகுந்த தகவல் கிடைத்ததின் பேரில் சோதனை நடத்தப்படுவதாக கூறியுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு ஆட்சியாளர்களுக்கு மிக நெருக்கமானவரான சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் கட்டுகளும், பல கோடிக்கு இணையாக தங்க கட்டிகளும் முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக செய்தி வந்தது. அதன் தொடர்ச்சியாகவே இன்று சோதனை நடத்தப்படுகிறது என்று கூறியுள்ளனர். சோதனை நடத்தும் மத்திய அரசின் செயலையோ அதிகாரிகள் தங்கள் கடமையை ஆற்றுவதையோ நான் குறைகூற விரும்பவில்லை, மாறாக நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தவர்கள் தமிழகத்தை ஊழல் நாடாக மாற்றிவிட்டனரே, அதன் விளைவுதான் இந்த சோதனை என்று எண்ணும் பொழுது வேதனையாக உள்ளது. தான்தோன்றித்தனமாக நாட்டு மக்களுக்கு ஒரு திட்டத்தில் எத்தனை பலன் என்று யோசிப்பதற்கு பதிலாக, இந்த திட்டத்தில் நமக்கு என்ன பலன், எவ்வளவு இலாபம் என்று செயல்படக்கூடியவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் சிக்கி தமிழகமே தலைகுனிவை சந்திக்கும் நிகழ்வாகவே இதைநான் கருதுகிறேன்.

இவர்களின் இதுபோன்ற செயல்களால் தமிழகத்தில் பல நல்ல தலைவர்கள் ஆட்சி செய்த தலைமைச் செயலகம் இன்று இவரைப்போன்றவர்களால் கலங்கப்படுத்தப்படுகிறதே என்று எண்ணும் பொழுது பெரும் வேதனை தருகிறது. பலமிக்க யாணை சோர்ந்து படுத்துவிட்டால் சிறு எறும்பு கூட அதனை ஏளனம் செய்யும் என்பது பழமொழி, அதுபோல் வையகமே போற்றும் நம் தமிழகம் இலஞ்சம் ஊழல் வாதிகளால் களங்கப்படுத்தப்பட்டு பலரும் எள்ளி நகையாடும் அளவு சென்றுவிட்டதே என்று எண்ணும் போது ஒட்டுமொத்த தமிழகமே வெகுண்டு எழவேண்டிய தருனமாக கருதுகிறேன். தமிழகத்தை நிர்வகிக்க நீதி, நேர்மை, நியாயம், வையகத்தில் யாருக்கும் அஞ்சிடாத பண்பு கொண்ட தைரியமான நல்ல தலைவர்கள் ஆட்சி செய்யும் தமிழகமாக இருக்க வேண்டும் என்று சிந்திக்க செய்கிறது. (ஆங்கிலத்தில் LACK OF LEADERSHIP என்று கூறுவார்கள்) அதுபோல் தமிழகத்தில் நன்மைக்காக தட்டிக்கேட்கும் தைரியம் மிக்க சிங்கநிகர் ஆட்சி வர வேண்டிய தருணமாக பார்க்கத் தோன்றுகிறது. எனவே தமிழகத்திற்கும், தலைமைச் செயலகத்திற்கும் ஏற்பட்ட இந்த நிலை, இனிவரும் காலங்களில் நிகழா வண்ணம் தமிழர்களாகிய நாம் சிந்தித்து செயல்படவேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.