சென்னையை மூன்று கட்டமாக தாக்கிய வர்தா புயலால் 10,000 மின்கம்பங்கள்
சேதமடைந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல், மேற்குப் பகுதி- மையப் பகுதி-
கிழக்குப் பகுதி என 3 கட்டங்களாக சென்னையை நேற்று பிற்பகலில் தாக்கியது.
இப்புயல் பிற்பகல் 3 மணி முதல் 5 மணிக்குள் சென்னை துறைமுகம் அருகே கரையைக்
கடந்தது.
புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கிய சென்னை நகரம் பலத்த சேதத்தை
சந்தித்துள்ளது. நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால்
நேற்று முழுவதும் சென்னை நகரமே இருளில் மூழ்கியது. 2வது நாளாக பல இடங்களில்
மின்விநியோகம் சரிசெய்யப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு
ஆளாகியுள்ளனர். மின்சாரம் இல்லாததால் செல்போன் சேவை முற்றிலும்
முடங்கியுள்ளது.
இந்தநிலையில் வர்தா புயலால் 10 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாக
மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 450 மின்மாற்றிகளும் சேதம்
அடைந்துள்ளதாகவும் மின்வாரியம் அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள அனைத்து
மின் உற்பத்தி நிலையங்களும் செயல்படுகின்றன. மற்ற மாவட்டங்களில் இருந்து
7,000 மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
சென்னைக்கு மின்சாரம் கொண்டு வரப்படும் 24 உயர்ந்த மின்கோபுரங்கள்
சாய்ந்துள்ளதால் அதை சரிசெய்வதில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில்
6,000 மின் ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெளி
மாவட்டங்களில் இருந்து 3000 ஊழியர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கே.கே.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், ராயப்பேட்டை, கோடம்பாக்கம்,
மாம்பலம், உயர்நீதிமன்றம், கோயம்பேடு, எம்எம்டிஏ ஆகிய பகுதிகளில்
மின்விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது. நகர் பகுதிகளில் இன்று இரவுக்குள்
மின் விநியோகம் சீரடையும். புறநகர்ப் பகுதிகளில் 3 நாட்களுக்குள் முழுமையாக
மின்சாரம் வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment