ரியோ டி ஜெனிரோ: இந்தியாவின் சிந்து 'மைண்ட் கேம்' ஆடியதாக ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற ஸ்பெயினின் கரோலினா மரின் குற்றம்சாட்டியுள்ளார். நேற்றைய இறுதி போட்டியின்போது உலக முதல் தர வீராங்கனையான மரின், இந்தியாவின் சிந்துவிடம், 21-19 என்ற கணக்கில் முதல் கேமில் தோல்வியை தழுவினார்.
இதன்பிறகு சுதாரித்துக் கொண்டு, 21-12 மற்றும் 21-15 என்ற கணக்கில் அடுத்தடுத்த கேம்களை வசப்படுத்தி தங்கம் வென்றார். போட்டிக்கு பிறகு நிகழ்ச்சியில் பேசிய மரின், போட்டியில் வெல்ல சிந்து செய்த ட்ரிக்கை பற்றி தெரிவித்தார். ஆசிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் பேட்மின்டனில் நான் சாதித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இறகு பந்தை புதிதாக வைத்துக்கொண்டால், அடித்தால் வேகமாக செல்லும். அதுதான் எனது நோக்கம். ஆனால், சிந்துவோ, பந்தை மாற்ற சம்மதிக்கவில்லை. இது ஒரு மைண்ட் கேம். நான் எனது கவனத்தை இழக்க வேண்டும் என்பது சிந்து விருப்பமாக இருந்தது. இதனால், ஆட்டத்தில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டது. பந்தை அடித்த பிறகு வேகம் குறைந்தே அது பயணித்தது. ஆனால் நான் இப்படியும் நடக்கும் என எதிர்பார்த்து அதற்கேற்ப பயிற்சி பெற்றிருந்ததால் சமாளித்து வெற்றி பெற்றுவிட்டேன். விளையாட்டில் இதெல்லாம் சகஜம்" என்றார். ஆனால், ஒவ்வொரு பாயிண்ட் வெற்றி பெறும்போதும், மரின் மிகவும் ஆக்ரோஷமாக சத்தம் போட்டார். இது சிந்துவின் கவனத்தை சிதற செய்வதாக இருந்தது. நடுவர் பல முறை, மரினை எச்சரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment