மக்கள் நலக்கூட்டணியில் சாதிக்கட்சியான பா.ம.க.வை சேர்த்துக்கொள்ளமாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக நிர்வாக குழு கூட்டம் நிர்வாகக்குழு தலைவர் த.இந்த்ரஜித் தலைமையில் திண்டுக்கல்லில் நடந்தது. இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிவரும் 26-ம் தேதியோடு தனது 90-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் திராவிடக் கட்சிகள் நிலங்களை ஆக்கிரமித்து கட்டடங்களையும், குடியிருப்புகளையும் உருவாக்கியுள்ளன. அதன் விளைவு சமீபத்தில் பெய்த மழையினால் 600-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டது. மேலும், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் சேதம் அடைந்தன. வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அனைத்து கட்சிகளையும் கூட்டி தமிழக அரசு விவாதிக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை போதுமானதல்ல. உயிரிழந்தர்வளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், விவசாயபாதிப்புகளுக்கு ஏக்கருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதமும் வழங்கவேண்டும். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று இல்லை என்ற எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஊழலை எதிர்க்கும் விஜயகாந்த், ஜி.கே.வாசன் ஆகியோர் மக்கள் நலக்கூட்டணிக்கு வரவேண்டும். இந்த கூட்டணியில் சாதிக்கட்சியான பா.ம.க.வை சேர்த்துக்கொள்ளமாட்டோம். தி.மு.க தலைவர் கருணாநிதி கண்டு வந்த முதல்வர் கனவு கலைந்து போனதால் தற்போது கலக்கம் அடைந்துள்ளார். பெரிய கட்சிகள் பணத்தை நம்பியே களத்தில் உள்ளன. அந்த முயற்சியை 2016-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் மக்களே முறியடிப்பார்கள்.
No comments:
Post a Comment