இத்தனை போராடியும் இளம் குற்றவாளியை விடுதலை செய்துவிட்டதே நீதிமன்றம் என்று வேதனையை தெரிவித்து, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர் நிர்பயாவின் பெற்றோர்.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா ( ஜோதி சிங் ) பலாத்கார கொலை வழக்கில் இளம் குற்றவாளி விடுதலையை தடை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இது தொடர்பான மேல் முறையீட்டில் நாளை விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16ம் தேதி இரவு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா, தனது நண்பன் முன்பாகவே 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளம் குற்றவாளி தண்டனை காலம் முடிந்து விடுதலை என்றானது. இதற்கு மருத்துவ மாணவி பெற்றோர் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கை ஒத்தி வைத்த டெல்லி ஐகோர்ட் இளம் குற்றவாளியை விடுதலை செய்ய தடை விதிக்க மறுத்தது.
இந்த சூழலில் டெல்லி மகளிர் ஆணையம் சார்பில் நேற்று இரவோடு இரவாக சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் இளம் குற்றவாளியை விடுவிக்க தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் இதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதுவரை இளம் குற்றவாளியை விடுதலை செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற டெல்லி மகளிர் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
இதன் பின்னர், நாளை நடைபெறவிருக்கும் மேல் முறையீட்டு விசாரணை குறித்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, ’’சட்டமே குற்றவாளியை காக்கிறது , நாளைக்கு சுப்ரீம் கோர்ட் விசாரிப்பதால் எவ்வித பயனும் இல்லை , குற்றவாளி தப்பி்க்காமல் இருக்க நான் இறுதி மூச்சு வரை பாடுபடுவேன்’’ என்று தெரிவித்தார் .
இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட் உத்தரவின் பேரில் இளம் குற்றவாளி இன்று ரகசிய இடத்தில் விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு தையல் பயிற்சி அளித்து ரகசியமான இடத்தில் வசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி ராஜ்பாத்தில் பல்வேறு அமைப்பினருடனும், பொதுமக்களுடனும் நிர்பயா பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். நிர்பயாவின் பெற்றோர் உடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இத்தனை போராடியும் இளம் குற்றவாளியை விடுதலை செய்துவிட்டதே நீதிமன்றம் என்று இளம் குற்றவாளி விடுதலைக்கு வேதனை தெரிவித்த மருத்துவ மாணவியின் பெற்றோர், ’’இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment