துபாய் வாழ் தமிழர்கள் அளித்துள்ள 5.5 டன் நிவாரணப் பொருட்களுக்கு துபாய் அரசு வரி விலக்கு அளித்துள்ள நிலையில் சென்னையில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் ரூ.3.5 லட்சம் சேவை வரி கேட்பது அவர்களை வேதனை அடைய வைத்துள்ளது. வரலாறு காணாத கனமழையால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள், பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் துபாய் வாழ் தமிழர்கள் 5.5 டன் நிவாரணப் பொருட்கள் அளித்துள்ளனர். அதற்கு துபாய் அரசு வரி விதிக்காமல் தனது பெருந்தன்மையை காட்டியுள்ளது. எமிரேட்ஸ் விமான நிறுவனமோ நிவாரணப் பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல முன்வந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகளோ ரூ.3.5 லட்சம் சேவை வரி அளிக்க வேண்டும் என்கிறார்கள். நிவாரணப் பொருட்கள் தானே வரி விலக்கு அளியுங்கள் என்றால் அதற்கு தமிழக அரசின் அனுமதி தேவை என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து அனுமதி பெற தமிழக சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் எஸ்.எஸ். முயற்சி செய்து வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இப்பொருட்களை ட்யூட்டி ஃப்ரீயாக அனுமதிக்க யாராவது உதவினால் நன்றாக இருக்கும். இது பற்றி உதவ முன்வரும் நல்உள்ளங்கள் நந்தகுமார் என்பவரை 7708291643 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


No comments:
Post a Comment