சென்னை விமான நிலையத்தில் 2 ராடார்கள் செயலிழந்ததால், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் தாமதமாக தரை இறக்கப்பட்டன. சென்ற வாரம் சென்னையில் பெய்த கனமழை காரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அப்போது மொத்தமுள்ள 3 ராடார்களில் 2 பழுதடைந்தன. பழுது சரி செய்யப்பட்ட நிலையில், கடந்த 6-ம் தேதியில் இருந்து விமான நிலையம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இந்நிலையில், பழுது நீக்கப்பட்ட 2 ராடார்களும் இன்று மீண்டும் செயலிழந்தன. இதனால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மும்பையில் இருந்து 128 பயணிகளுடன் வந்த ஜெட் ஏர்வேஸ் விமானமும், கொல்கத்தாவில் இருந்து 142 பயணிகளுடன் வந்த இண்டியன் ஏர்வேஸ் விமானமும் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன. மேலும், சிங்கப்பூரில் இருந்து வந்த சரக்கு விமானம் ஒன்றும் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது. மேலும், டெல்லி, மும்பை, ஹைதராபாத், திருவனந்தபுரம், கொச்சின், மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 8 விமானங்கள் சிக்னல் கிடைக்காததால் வானில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வட்டமிட்டபடி இருந்தன. பிறகு தாமதமாக கீழே இறங்கின. விமான நிலைய அதிகாரிகள், ராடார்களை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


No comments:
Post a Comment