Latest News

பெங்களூரில் நூற்றாண்டிலேயே அதிகமான மழை பெய்து சாதனை! அப்படியும் ஒரு துளி தண்ணீர் தேங்கவில்லை


நூற்றாண்டிலேயே அதிகபட்சமாக நவம்பர் மாத மழையளவில் பெங்களூர் இவ்வாண்டு சாதனை படைத்துள்ளது. அவ்வளவு அதிக மழை பெய்தும், பெங்களூரில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை என்பது சிறப்பு. பெங்களூரில் பொதுவாக நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே பனிப்பொழிவுடன், குளிர் வாட்ட தொடங்கிவிடும். ஆனால், இந்த ஆண்டு, வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலங்களின் புண்ணியத்தால் மழை கொட்டி வருகிறது. மழையோடு, இயல்பான குளிரும் சேர்ந்துகொண்டு நகரவாசிகளை வாட்டி வருகிறது.

நேற்று இரவு 8.30 மணிவரையிலான வாநிலை நிலவரப்படி, பெங்களூரில், நவம்பர் மாதத்தில் மட்டும், 256.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது (நேற்று இரவு முதல், விடிய விடிய மழை பெய்தது இந்த கணக்கில் சேரவில்லை). 1916ம் ஆண்டு நவம்பர் மாதம், பெங்களூரில் 252.2 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. இதுதான் இதுவரை நவம்பர் மாத சாதனை. தற்போது, 99 வருடங்களுக்கு பிறகு, அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இவ்விரு சாதனைகளுக்கு அடுத்தபடியாக 2010ம் ஆண்டு நவம்பரில் 145.3 மி.மீ மழை பெய்திருந்ததுதான் 3வது பெரிய சாதனை. நவம்பர் மாத சராசரி மழையைவிட 5 மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளதாக பெங்களூர் வானிலை இலாகா தெரிவித்துள்ளது. இன்னும் 10 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், பெங்களூர் தனது சாதனை அளவை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஏறத்தாழ சென்னைக்கு நிகரான மக்கள் தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு) கொண்டுள்ள பெங்களூரில், 5 மடங்கு அதிக மழை பெய்தும்கூட, சாலையில் மழை நீர் குளம், குட்டை போல தேங்கவில்லை. வீட்டுக்குள் தண்ணீர் போய்விட்டது என்று எந்த மக்களும் கஷ்டப்படவில்லை. பெங்களூரிலுள்ள திறமையான வடிகால் வசதி இதற்கு முக்கிய காரணம். சென்னை மாநகராட்சி இதில் பாடம் கற்குமா?

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.