தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் சென்னை, காஞ்சிபுரம். திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் ரமணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவான, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த திங்கட்கிழமை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அப்போது தமிழகம் முழுவதும் பெரும் மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் கனமழை கொட்டியதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் உண்டானது. விளைநிலங்கள் சேதமடைந்தன. வீடுகளையும், உடமைகளையும் இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக கன மழை பெய்துள்ளது என்றும், இது மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. இதேபோல தெற்கு அந்தமான் புதிதாக உதயமான காற்றழுத்த மண்டலம், மேற்கு நோக்கி நகர்ந்து வங்கக் கடலின் தென்கிழக்கே நகர்ந்துள்ளது. இது நாளைய தினம் தாழ்வு நிலையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யும். தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்யும். பல இடங்களில் தொடர் மழையும், இரவு நேரத்தில் கன மழை பெய்யும் என்றும் ரமணன் கூறியுள்ளார்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் 34 செ.மீ. மழையும், புழல், செங்குன்றம் பகுதிகளில் தலா 21 செ.மீ. மழையும், செய்யாறு பகுதிகளிலும் 19 செ.மீ. மழையும் பதிவாகியுள்ள என்றும் ரமணன் கூறியுள்ளார். மாதவரம், திருவள்ளூர், ஆவடி பகுதிகளில் தலா 16 செ.மீ. மழையும், நுங்கம்பாக்கம், சோழவரத்தில் தலா 15 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. டிஜிபி அலுவலகம் பகுதியில் 14 செ.மீ மழையும் திருவாலங்காடு சென்னை விமான நிலையம் 12 செ.மீ மழை பெய்துள்ளது. வரும் திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் கனமழை கொட்டும் என்றும் ரமணன் கூறியுள்ளார். சென்னையில் கடந்த 14 மணிநேரமாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்கு ஆளாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். எம்.எம்.டி.ஏ சாலையில் மழை நீரில் சாலையோரம் இருந்த மின்பெட்டிகள் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகளில் பெருக்கெடுத்துள்ள மழை நீரை அகற்றவும், போக்குவரத்தை சீர்செய்யவும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். வட சென்னை பகுதியில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் சென்னைவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment