மனைவி இல்லாத ஆண் மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தையை பராமரிக்க 2 ஆண்டு விடுமுறை அளிக்கலாம் என 7வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க அமைக்கப்பட்ட 7வது சம்பள கமிஷனின் அறிக்கை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசின் ஆண் ஊழியர்களுக்கும் முதல்முறையாக குழந்தை பராமரிப்பு விடுமுறை அளிக்க சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 6வது சம்பள கமிஷன்தான், பெண் ஊழியர்களுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் (730 நாட்கள்) குழந்தை பராமரிப்பு விடுமுறை அளிக்க முதல்முறையாக சிபாரிசு செய்தது. அது அப்படியே அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, பெண் ஊழியர்கள், 18 வயது வரையிலான தங்கள் மைனர் குழந்தைகளைப் பராமரிக்க தங்கள் ஒட்டுமொத்த பணிக்காலத்தில் 2 ஆண்டுகள்வரை விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இந்நிலையில், நீதிபதி மாத்தூர் தலைமையிலான 7வது ஊதிய கமிஷனின் பரிந் துரை அறிக்கை மத்திய அரசிடம் வியாழக்கிழமை தாக்கல் செய்யப் பட்டது. அதில் 7வது சம்பள கமிஷன், ஆண் ஊழியர்களுக்கும் முதல்முறையாக குழந்தை பராமரிப்பு விடுமுறை அளிக்க சிபாரிசு செய்துள்ளது. மனைவி இல்லாத நிலையில், குழந்தைகளை பராமரித்து வரும் ஆண் ஊழியர்களுக்கு இந்த விடுமுறை அளிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து 7வது சம்பள கமிஷன் அறிக்கையில், ''மத்திய அரசு ஆண் ஊழியர், மனைவி இல்லாமல் வாழ்பவராக இருந்தால், குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு, அவரது தோள் மீது விழுகிறது. ஆகவே, அவருக்கும் குழந்தை பராமரிப்பு விடுமுறை அளிக்க சிபாரிசு செய்கிறோம். இதில், முதல் 365 நாட்கள், 100 சதவீத சம்பளத்துடன் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். மீதி 365 நாட்கள், 80 சதவீத சம்பளத்துடன் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். உண்மையிலேயே பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மட்டும் பலன்அடையும் வகையில், இதில் ஏதேனும் அளவுகோலை அறிமுகப்படுத்தலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
7வது சம்பள கமிஷன் அறிக்கையில் உள்ள முக்கிய பரிந்துரைகள் : ஒட்டுமொத்தமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55% ஊதிய உயர்வு. அடிப்படை ஊதியத்தில் 16% உயர்வு. படிகளில் 63% உயர்வு. ஆண்டுக்கு 3% ஊதிய உயர்வு. 52 படிகள் ரத்து, 36 படிகள் இதர படிகளோடு இணைப்பு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக நிர்ணயம். அதிகபட்ச ஊதியம் ரூ.2.5 லட்ச மாக நிர்ணயம், குரூப் இன்சூரன்ஸ் தொகை ரூ.50 லட்சமாக உயர்வு. இதனால் பிரிமியம் பிடித்தம் உயரும், ஓய்வூதியதாரர்களுக்கு 24 சதவீத உயர்வு. தனியார் நிறுவனங்கள் போன்று பணித்திறன் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வட்டியில்லா கடன்கள் ரத்து. பணிக்கொடை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு. ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் ராணுவத்தை போன்று துணை ராணுவ படைகளிலும் அமல். தொலைத்தொடர்பு, இன்சூரன்ஸ், மின்வாரியம், விமான நிலையங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு ரூ.4.50 லட்சம் ஊதியம். ராணுவ பணிக்கு இளைஞர்களை ஈர்க்க ஐஐடி மற்றும் ஐஐஎம்களில் ஓராண்டு மானியக் கல்வி. ராணுவ குறுகிய கால சேவைகளில் பணியாற்றும் அதிகாரிகள் 7 முதல் 10 ஆண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் ஓய்வுபெற சிறப்பு சலுகை.
No comments:
Post a Comment