அந்நியச்செலாவணி மோசடி வழக்கில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மத்திய நிதி அமைச்சகத்தின் அமலாக்கப் பிரிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது 1996ம் ஆண்டில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் எழும்பூர் நீதிமன்றத்தில் அந்நியச் செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்தனர். மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில்,ஒரு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று சசிகலாவும், 2 வழக்குகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரனும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி, அந்த வழக்குகளிலிருந்து இருவரையும் விடுவித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய நிதி அமைச்சகத்தின் அமலாக்கப் பிரிவு உதவி இயக்குநர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். அதில், சசிகலாவின் தோழியான ஆர்.சுசீலாவுக்கு வெளிநாட்டில் இருந்து 19,91,610 அமெரிக்க டாலர் வந்தது. இவ்வளவு பெரிய தொகை பெறும் அளவுக்கு இவருக்கு நிதி ஆதாரம் இல்லை. பின்னர், சுசீலா, சென்னையை சேர்ந்த சித்ராவுக்கு கடன் கொடுத்திருக்கிறார். சித்ரா, ரூ.3.52 கோடியை சசிகலாவுக்கு கடனாகக் கொடுத்துள்ளார். தலா ரூ.22 லட்சத்துக்கான காசோலைகளை வி.என்.சுதாகரன், இளவரசி பெயரில் தந்துள்ளார். சசிகலா மீதான குற்றச்சாட்டில் போதிய முகாந்திரம் இருப்பதால், அவரை விடுவித்து எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது. டி.டி.வி. தினகரனுக்கு எதிராக அப்பீல் இதுபோல டி.டி.வி. தினகரன் விடுதலையையும் எதிர்த்து மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுக்களை உயர் நீதிமன்ற நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு விசாரணைக்க வந்தது. அமலாக்கப் பிரிவு அதிகாரி சார்பில் வழக்கறிஞர் தண்டபாணி வாதிட்டார். இதையடுத்து மனுவுக்கு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment