Latest News

இலவச மிக்சி, கிரைண்டர் வேண்டாம்… மக்களுக்கு வேலை கொடுங்க… கேட்கிறார் பிரேமலதா


மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்தால், தரமான மிக்ஸி, கிரைண்டர்களை மக்கள் வாங்கி கொள்வார்கள். ரூ.24 ஆயிரம் கோடிக்கு மதுகுடிப்பவர்களால் இந்த இலவச மிக்சி, கிரைண்டரை வாங்க முடியாதா?" பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி தே.மு.தி.க. திருப்பூர் மாநகர், மாவட்டம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் இதனை கேட்டுள்ளார்.

குடிநீரில் புழுக்கள் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் குடிநீர் மற்றும் குப்பை பிரச்னை அதிக அளவில் உள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படும் குடிநீரில் புழுக்களும் வருகிறது. இதுபோக, குடிநீருக்கு 300 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தி இருக்கிறார்கள். மக்களின் அறியாமைதான் இதற்கு காரணம். மக்கள் முதலில் திருந்த வேண்டும். எந்த பணியும் செய்யாமலேயே, தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஏமாற்றிவிடலாம் என நினைக்கிறார்கள்.

வாட்ஸ் ஆப் விசாலாட்சி மேயர் விசாலாட்சி என்று ஒருவர் இருக்கிறார். அவர் படிக்காதவர், பி.ஏ. மற்றும் எம்.ஏ என்பதற்கு புது இலக்கணம் ஒன்று சொல்லுகிறார். திருப்பூர் மேயர் எதில் பிரபலமோ, இல்லையோ.. ஆனால், தமிழகம் முழுவதும் பி.ஏ.,வுக்கும், எம்.ஏ வுக்கும் ஒரு புது இலக்கணம் சொல்லி வாட்ஸ் அப்பில் ரொம்ப பிரபலமாக உள்ளார்.

தரம் உயரவில்லை திருப்பூர் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டதோடு சரி, எந்த வசதியும் செய்யப்படவில்லை. மேயர், அமைச்சர் ஆகியோரின் தரம்தான் உயர்ந்திருக்கிறது. அரசாங்கத்தால் திருப்பூர் முன்னேறவில்லை. தொழிலாளர்களால்தான் முன்னேறி உள்ளது. அதேபோல் கஷ்டப்படும் முதலாளிகளுக்கும் இந்த அரசாங்கம் எந்த சலுகையும் செய்வதில்லை.

அம்மா உணவகம் மது பிரச்னையால் தமிழகம் மீண்டு விடமுடியாத சூழ்நிலையில் உள்ளது. ரேசன் கடைக்கு சென்றால் எந்த பொருட்களும் கிடைக்காத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அம்மா உணவகத்தை நடத்த முடியாததால்தான் குடிநீர் வரியை உயர்த்தி மக்களை கொடுமைப்படுத்துகிறார்கள். ஆகவே இந்த குடிநீர் வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

110 விதியில் அறிவிப்பு தமிழகத்திற்கு ரூ.4.5 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்நிலையில், 110 விதியின் கீழ் பல ஆயிரம் கோடிகளுக்கு திட்டங்களை ஜெயலலிதா அறிவிக்கிறார். இந்த ஆட்சியில் வெறும் அறிவிப்புகள்தான் வெளியிடப்படுகிறது.

மிக்சி, கிரைண்டர் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்தால், தரமான மிக்ஸி, கிரைண்டர்களை மக்கள் வாங்கி கொள்வார்கள். மக்களுக்கு தேவை குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்தான். குடிநீரை காசுக்கு விற்கும் ஒரு அவல ஆட்சி ஜெயலலிதா ஆட்சிதான். ரூ.24 ஆயிரம் கோடிக்கு மதுகுடிப்பவர்களால் இந்த இலவச மிக்சி, கிரைண்டரை வாங்க முடியாதா?.

மக்களை ஏமாற்றும் அரசு இலவசம் மக்களை உயர்த்துவதாக இருக்க வேண்டும். மக்களை ஏமாற்றும் ஆட்சிதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களை முட்டாள்கள் என நினைக்கிறார்கள். ஆகவே நீங்கள் அறிவாளிகள் என நிரூபிக்கும் வகையில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும்.

மக்கள் பிரச்சினை மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை. இதைப்பற்றி பேசினால் அவதூறு வழக்கு போடுவார்கள். போட்டுக்கொள்ளட்டும். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை பேச அனுமதிக்காததால், தற்போது மக்கள் முன் நாங்கள் நிற்கிறோம். மக்கள் இந்த ஆட்சிக்கு, வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும். மீண்டும் 100க்கும் 500க்கும் ஓட்டுக்களை விற்றால், எந்த காலத்திலும் தமிழகத்தை மாற்ற முடியாது" என்றும் பிரேமலதா பேசியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.