எகிப்து அருகே அகதிகளுக்காக ஒரு தீவையே விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளார் நகுய்ப் சாகுரிஸ் என்ற தொழிலதிபர். இந்த தீவிற்கு கடலில் மூழ்கிய சிறுவன் அய்லானின் பெயரைச் சூட்டவும் அவர் முடிவு செய்துள்ளார். சிரியாவில் இருந்து குடும்பத்தோடு தப்பி வந்த போது துருக்கி கடலில் மூழ்கி பலியான 3 வயது சிறுவன் அய்லான். கோஸ் தீவில் கரை ஒதுங்கிய அய்லானின் சடலமும், அதை போலீஸ்காரர் ஒருவர் கையில் ஏந்திச் சென்ற புகைப்படமும் உலகையே உலுக்கியது. ஆனபோதும் தொடர்ந்து சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள பகுதிகளில் இருந்து உள்நாட்டுப் போருக்கு பயந்து, உயிர் பிழைப்பதற்காக ஏராளமானோர் கடல் வழியாக படகுகள் மூலம் பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
அய்லான் தீவு... அவ்வாறு அகதிகளாக செல்பவர்களுக்காக ஒரு தீவையே விலைக்கு வாங்க முன்வந்துள்ளார் எகிப்து நாட்டை சேர்ந்த நகுய்ப் சாகுரிஸ் என்ற கோடிஸ்வரர். இவர் தான் வாங்கவுள்ள தீவிற்கு அய்லானின் பெயரை வைக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
வேலைவாய்ப்பும்... அந்த தீவில் அகதிகள் தங்க வீடுகள் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்கி தரவும் நகுய்ப் திட்டமிட்டுள்ளார். இதற்காக கிரீஸ் அல்லது இத்தாலி நாடுகள் தனக்கு ஒரு தீவை விலைக்கு விற்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எங்கேயுள்ளது அந்தத் தீவு... இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "அகதிகளுக்காக நான் வாங்கும் தீவுக்கு சமீபத்தில் அகதியாக புகலிடம் தேடி துருக்கி நாட்டு கடலில் மூழ்கி கரை ஒதுங்கிய சிறுவனின் நினைவாக ‘அய்லன் தீவு' என பெயரிட முடிவு செய்துள்ளேன். அந்த தீவு எங்கே உள்ளது? என்பதை இனிதான் நான் தேட வேண்டும்" என நகுய்ப் குறிப்பிட்டுள்ளார்.
கோடீஸ்வரர்... எகிப்து நாட்டில் பிரபல தொலைத்தொடர்பு நிறுவன அதிபராக உள்ளார் நகுய்ப். இவரது சொத்து மதிப்பு சுமார் 300 கோடி அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment