சிவகங்கை அருகே நண்பர்களுக்கு மதுவிருந்து அளித்த வாலிபர் ஒருவர் தனது காதலியை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ள போலீசார் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். சிவகங்கை அருகேயுள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் ஜெயபாண்டி (22). இவர், கடந்த ஆண்டு சிவகங்கை அரசு கல்லூரியில் பி.ஏ. படித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போது, கீழ வாணியங்குடியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். ஜெயபாண்டியின் நண்பரும் உறவினருமான புதுப்பட்டியை சேர்ந்த கார்த்தி (25) என்பவர் இன்னும் இரண்டு தினங்களில் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல இருக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
வெளிநாடு செல்லும் கார்த்தி, தனது நண்பர்களான புதுப்பட்டியை சேர்ந்த ஜெயபாண்டி (22), ரகு (20), திருமலை (21), வினோத் ஆகியோருக்கு புதன்கிழமை இரவு ஈசனூர் கண்மாய் பகுதியில் மது விருந்து கொடுத்துள்ளார். இந்த மது விருந்தில் கலந்து கொண்ட ஜெயபாண்டி, தனது காதலியான இளம்பெண்ணை இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார். மது போதை தலைக்கு ஏறியதால், ஜெயபாண்டி உட்பட ஜந்து பேரும் இணைந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது, ஈசனூரை சேர்ந்த தியாகராஜன் மகன் தென்பாண்டி (30) என்பவர் அந்தப்பக்கம் வந்துள்ளார். அங்கு பாலியல் பலாத்காரத்தில் சிக்கி இளம்பெண் சத்தம் போடுவதை அறிந்த தென்பாண்டி, அங்கிருந்தவர்களிடம் நீங்கள் யார் என்ன செய்கிறீர்கள் என்று சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயபாண்டி உள்ளிட்ட ஐவரும் உதவிக்கு வந்த தென்பாண்டியை கத்தியால் குத்தினர். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தப்பி ஓடிவந்த தென்பாண்டி கிராமத்திற்குள் வந்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். கண்மாய் பகுதிக்கு திரண்டு சென்ற 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இளம்பெண்ணை மீட்டனர். மேலும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஜந்து பேருக்கும் தர்ம அடி கொடுத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீஸார், இளம்பெண் அளித்த புகாரின்படி ஜெயபாண்டி, ரகு, திருமலை, கார்த்தி ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய வினோத் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிராம மக்கள் தாக்கியதில் காயமடைந்த ஜெயபாண்டி உட்பட நான்கு பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இளம்பெண்ணை கண்மாய்க்குள் வைத்து 5 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment