நாளுக்கு நாள் அதிரடியாக வெங்காய விலை உயர்ந்து வரும் நிலையில், மும்பை சந்தையில் 700 கிலோ வெங்காயங்கள் திருடு போயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் முக்கியமா, வெங்காயம் முக்கியமா என்று யாராவது கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு மக்கள் வெங்காயம்தான் முக்கியம் என்று டக்கென கூறுவார்கள். அப்படி ஒரு கிராக்கி வெங்காயத்திற்கு ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வெங்காயத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. விலையைக் கேட்டால் ரத்தக் கண்ணீர் வருகிறது.
உள்நாட்டு விளைச்சல் குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் மொத்த கொள்முதல் மற்றும் சில்லரை விலை நிலையாக இல்லாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியில் பொதுமக்களின் நலனை கருதி வெங்காயம் மானிய விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெங்காயத்தை பதுக்குவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மும்பை சியான் பகுதியில் உள்ள சந்தையில் மொத்த விலைக் கடையொன்றில் சுமார் 700 கிலோ எடையுள்ள 24 வெங்காய மூட்டைகள் திருடு போயுள்ளன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் ஆனந்த் நாயக், மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வெங்காய திருடர்களைத் தேடி வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெங்காய விலை கிலோவுக்கு ரூ. 80 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே மிகப் பெரிய வெங்காய சந்தையாக கருதப்படும் மகாராஷ்டிர மாநிலம் லசால்கான் சந்தையில் வெங்காயத்தின் மொத்த கொள்முதல் விலை கிலோ ரூ.57 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment