நல்லெண்ண நடவடிக்கையாக பாகிஸ்தான் விடுதலை செய்த, 3 சிறுவர்கள் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் நேற்று நாடு திரும்பினர்.
கராச்சியில் லாந்தி, மல்ஜிர் ஆகிய சிறைகளில் இருந்த இவர்கள் கடந்த வார இறுதியில் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் நேற்று அதிகாலை 1 மணியளவில் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே அட்டாரி / வாகாவில் உள்ள இரு நாடுகளின் கூட்டு சோதனைச் சாவடிக்கு வந்தனர். பிறகு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய எல்லைக்குள் வந்த இவர்கள் மிகவும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். பலர் தாய் நாட்டை வணங்கியும், சிலர் மண்டியிட்டு இந்திய மண்ணை முத்திமிட்டும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். அனைத்து மீனவர்களுக்கும் இந்திய மருத்துவக் குழுவினர் மருத்துவப் பரிசோதனை நடத்தினர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் சமீபத்தில் ரஷ்யாவில் சந்தித்துப் பேசினர். அப்போது ஏற்பட்ட புரிந்துணர்வை தொடர்ந்து, நல்லெண்ண நடவடிக்கையாக இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியப் பகுதிக்கு வந்த மீனவர்கள் கூறும்போது, “பாகிஸ்தான் பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்ததாக அந்நாட்டு கடலோர காவல் படையினர் எங்களை கைது செய்தனர். நாங்கள் விடுதலை செய்யப்பட்டாலும் மீண்டும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளோம். ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மதிப்பிலான எங்களின் படகுகள் பாகிஸ்தான் அதிகாரிகள் வசம் உள்ளன. கடன் வாங்கி நாங்கள் இந்தப் படகுகளை வாங்கினோம்” என்றனர்.


No comments:
Post a Comment