Latest News

மதுவிலக்கு: ஆக.15-ல் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஜெ.?


சுதந்திர தின விழாவின் போது தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் வகையிலான முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பூரணமதுவிலக்கு கோரி காந்தியவாதி சசிபெருமாள், மாணவி நந்தினி போன்ற தனிநபர்களின் போராட்டம்தான் நடந்து கொண்டிருந்தது. பின்னர் மெல்ல மெல்ல அரசியல் கட்சிகள் இந்த கோரிக்கையை முன்னெடுக்கத் தொடங்கின. நீண்டகாலமாக பாட்டாளி மக்கள் கட்சி இந்த பூரண மதுவிலக்கை வலியுறுத்தி வந்த போதும் கன்னியாகுமரியில் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின் போது காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் ஆங்காங்கே மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. மதுக்கடைகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.

கலிங்கப்பட்டி களேபரம் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் மதுக்கடைக்கு எதிராக அவரது தாயார் மாரியம்மாள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அங்கு மறுநாள் நடைபெற்ற போராட்டத்தின் போது வைகோ முன்னிலையில் மதுக்கடை சூறையாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்கு நிலைமை சென்றது.

பச்சையப்பன்கல்லூரி பாய்ச்சல் சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் மதுக்கடைக்கு எதிராக போர்க்கோலம் பூண்டனர். தி.மு.க. உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் அனைத்துமே பூரணமதுவிலக்கை வலியுறுத்தி வருவதால் ஆளும் அண்ணா தி.மு.க. அரசும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது.

உளவுத்துறை அட்வைஸ் அதுவும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பூரணமதுவிலக்கை நோக்கி தமிழக அரசும் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் ஜெயலலிதாவிடம் தற்போதைய மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்துவிட்டால் மக்களின் கோபம் தணியும் என்று உளவுத்துறை கூறியுள்ளது.

ஆகஸ்ட் 15-ல் அறிவிப்பு? அத்துடன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் எலைட் மதுபானக் கடைகளை அதிகரிக்கவும் அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதை ஏற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகஸ்ட் 15-ந் தேதியன்று தமது சுதந்திர தின உரையில் மதுவிலக்கு தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.

பாதியாக குறைப்பு முதல் கட்டமாக மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைப்பது; குறிப்பாக பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள மதுபானக் கடைகளை அகற்றுவது; மது அருந்தும் பார்களையும் கணிசமான அளவில் இழுத்து மூடுவது போன்ற அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரமும் குறைப்பு? அத்துடன் மதுபானக் கடைகளின் நேரத்தையும் குறைத்தும் முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கக் கூடும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.