Latest News

தமிழகம் புறக்கணிப்பு - மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!

ரயில்வே திட்டங்களில் தமிழக அரசு புறக்கணிக்கப்படுவதற்கு பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''தமிழ்நாட்டில் ரூ.19,500 கோடி செலவில் செயல்படுத்த திட்டமிட்டிருந்த 14 ரயில்த் திட்டங்கள் உட்பட மொத்தம் 160 திட்டங்களை ரத்து செய்ய மத்திய ரயில்வேத்துறை திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிற்போக்கான அணுகுமுறையுடன் கூடிய இம்முடிவு கண்டிக்கத்தக்கது.

ரயில்வேத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ரயில்வேத்துறை இணை அமைச்சர்களாக பொறுப்பேற்ற பிறகு தான் தமிழ்நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அளவில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

பா.ம.க.வைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்த காலத்தில் தான் தமிழகத்தை மீட்டர்கேஜ் பாதை இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ரயில்வேத் துறை வரலாற்றிலேயே 2002 முதல் 2009 வரையிலான கால கட்டத்தில் தான் தமிழகத்திற்கு அதிக அளவில் ரயில்த் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன; இந்த காலத்தில் தான் தமிழக திட்டங்களுக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை ரயில்வேத் துறை ஆவணங்களிலிருந்து அறிய முடியும்.

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ரயில்வேத் துறை அமைச்சர் பதவியில் இல்லாத நிலையில், தமிழகத்திற்கான திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தன. கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வேத் துறை நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது ரூ.19,500 கோடி மதிப்பிலான திட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளத்திற்கான ரயில்வேத் திட்டங்களும் ரத்து செய்யப்படவுள்ளன என்ற போதிலும், அம்மாநிலங்களைவிட பல மடங்கு அதிக மதிப்புள்ளத் திட்டங்கள் தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பிறகும் அதற்கான பணிகள் இன்றுவரை தொடங்கப்படவில்லை என்பதைக் காரணம் காட்டியே இத்திட்டங்களை அரசு ரத்து செய்யவிருக்கிறது. மத்திய அரசின் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ரயில்வேத் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு அவற்றை நிறைவேற்ற வேண்டியது அமைச்சகத்தின் கடமை ஆகும்.

இக்கடமையை நிறைவேற்ற தவறியதற்காக தண்டிக்கப்பட வேண்டியது ரயில்வேத் துறை அமைச்சகம் தானே தவிர மக்கள் அல்ல. தமிழ்நாட்டில் ரத்து செய்யப்படவுள்ள திட்டங்களில் மிகவும் முக்கியமானது சத்தியமங்கலம்-பெங்களூர் ரயில்வேப்பாதை திட்டம் ஆகும். 260 கி.மீ. நீளத்திற்கான இத்திட்டத்தை ரூ13,951 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. 1996-97 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

பா.ம.க.வைச் சேர்ந்தவர்கள் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர்களாக இருந்தபோது இத்திட்டத்தை செயல்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 2002 ஆம் ஆண்டில் பா.ம.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர்களும், தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அப்போதைய ரயில்வேத் துறை அமைச்சர் நிதிஷ்குமாரை சந்தித்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனாலும் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திட்டம் இப்போது சுற்றுச்சூழல் பிரச்னைகளையும் காரணம் காட்டி அடியோடு ரத்து செய்யப்பட இருப்பதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் ரத்து செய்யப்படவுள்ள திட்டங்கள் தவிர மேலும் பல திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. திண்டிவனம்-நகரி இடையிலான புதிய பாதை திட்டம், மதுரை-போடி இடையிலான அகலப்பாதை திட்டம் ஆகியவற்றுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால் அத்திட்டப் பணிகள் பாதியில் நிற்கின்றன. சென்னையிலிருந்து கடலூருக்கு கிழக்குக் கடற்கரை வழியாக புதிய பாதை அமைக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இத்திட்டங்களுக்கு மாநில அரசு நிதி உதவி செய்ய மறுப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
மொரப்பூர்-தருமபுரி இணைப்புப்பாதை திட்டத்திற்கு இன்னும் அனுமதி அளிக்கப்பட வில்லை. பல்வேறு ரயில்த் திட்டங்கள் முடக்கப்பட்டதாலும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து செய்யப்படுவதாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படுகிறது.
எனவே, ரூ.19,500 கோடி மதிப்பிலான ரயில்வேத் திட்டங்களை ரத்து செய்யும் முடிவை கைவிடுவதுடன், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில்வேத் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து அவற்றை விரைந்து செயல்படுத்தி முடிக்க ரயில்வேத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இவ்வாறு ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்..

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.