Latest News

உங்கள் காபியில் சிக்கரி இருக்கா?


காலையில் எழுந்ததும், ‘பெட்காபி’ இல்லை என்றால், நம்மில் பலருக்கு வேலையே ஓடாது. அதுவும் சிக்கரி கலக்காத ஃபில்டர் காபி, பியூர் ப்ளண்டட் காபி, இன்ஸ்டன்ட் காபி என்று காபியில் பல வகைகள் உண்டு. ஒவ்வொருத்தரும் சுவைக்கேற்ற மாதிரி அருந்தி வருகிறார்கள். போதாக்குறைக்கு இந்த காபி வகைகளையே  உயர்வாகவும், கெத்தாகவும் சொல்லிக் கொள்வதுமுண்டு. ஆனால், சிக்கரியில் உள்ள மகத்துவம் புரியாமல்தான் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். எளிதாகவும், விலை குறைவாகவும் உள்ள பொருட்களை கேவலமாக எண்ணும் மனோபாவம் நம் நாட்டினரிடம் மிகுதியாக உள்ளது.

காபியை, ‘முதலாளிகளுக்கான பானம்’ என்றும் டீயை, ‘தொழிலாளர்களுக்கான பானம்’ என்றும் சொல்லும் பழக்கம் வெள்ளையர்கள் காலத்தில் இருந்தது. காபி குடிப்பது அப்போதெல்லாம்… ஏன், இப்போதும் கூட ஒரு ஸ்டேட்டஸ்ஸாக பார்க்கப்படுகிறது.

50 ஆண்டுகளுக்கு முன் சிக்கரியை காப்பிக் கொட்டைகளுடன் கலந்து உபயோகிப்பது இந்தியாவில் பிரசித்தம். காபியில் சிக்கரியைக் கலக்கும்போது ஒருவித கசப்புச்சுவையை ஏற்படுத்துகிறது. இந்த சுவையை, பலரும் விரும்புகின்றனர். காபியில் 30% சிக்கரியைக் கலப்பது காபிப் பொடி தயாரிப்பவர்களின் வழக்கம். இதனால், காபியில் உள்ள காஃபின் அளவு குறைகிறது.

அப்படி என்னதான் இருக்கிறது சிக்கரியில் என்று பார்த்தால், சிக்கரி உடல் சூட்டைத் தணிக்கிறது. மூச்சுத் திணறல், அஜீரணக்கோளாறு, தலைவலி ஆகியவற்றை சரி செய்கிறது. மூளைக்கு நல்ல மருந்தாகவும் செயல்படுகிறது. இதன் கசாயம் மாதவிடாய் போக்கை சீர் செய்கிறது. ஈரல் நோய்களை குணமாக்கி, சிறுநீர் கழிப்பை அதிகப்படுத்துகிறது.

சிக்கரியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இதை பார்ப்பதற்கு முள்ளங்கியைப் போலவே இருக்கும். சிக்கரியின் கிழங்கை காயவைத்துதான் சிக்கரி தூள் தயாரிக்கிறார்கள். எளிதில் ஆவியாகும் தன்மைக் கொண்டது. இதன் எண்ணெய்ச் சத்துக்கள் வயிற்றுப்பூச்சிகளை அழிக்கும் வல்லமை வாய்ந்தவை. இதனால் கால்நடை உணவுகளில், சிக்கரியைப் பயன்படுத்துகின்றனர். கால்நடைகளின் வயிற்றுப்பூச்சிகளை அகற்றுவதில் சிறப்பாக பணிபுரிகின்றது.

சிக்கரியை ‘சிகோரியம் இன்டிபஸ்’ என்று தாவரப் பெயரில் அழைக்கிறார்கள். ஒரு காலத்தில் பிரான்ஸ் நாட்டில் காட்டுச்செடிபோல் எங்கு பார்த்தாலும், வளர்ந்து கிடந்தது. அங்கிருந்து இங்கிலாந்துக்குப் சென்று, அதன்பிறகு உலகம் முழுவதும் பரவியது.

இங்கிலாந்தில், காபியுடன் சிக்கரியைக் கலப்பது, 1832ல் தடை செய்யப்பட்டது. பின், 1840ல், சிக்கரியை கலப்பது குறித்து, காபி வாங்குவோருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்தத் தடையை விலக்கிக் கொண்டனர். நம் நாட்டில் கூட, சிக்கரி எத்தனை சதவிகிதம் கலக்கப்பட்டுள்ளது என்பதை காபி தூள் வாங்கும் கவரில் கட்டாயம் போடவேண்டும் என்ற விதிமுறை இன்றளவும் உண்டு.

இந்தியாவில் சிக்கரி தாவரம் பஞ்சாப் மற்றும் ஆந்திரபிரதேசம், பீகார், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மகாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு, ஒரிஸ்ஸா உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

ஃபிரான்ஸில் இதன் இலைகளை சலாட் செய்து பச்சையாகவே சாப்பிடுகின்றனர். இதன் வேர்களில் இருந்து தயாரிக்கப்படும் டானிக், சிறுநீர் சுலபமாகப் போக மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தவிர கல்லீரல், பித்தப்பை நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதன் விதைகள், வேர்கள் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இதன் இலைகள் மற்றும் வேரில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் (சிக்கோரியின் எஸ்கியுபின், எஸ்கியுலேட்டின்) போன்றவை உள்ளன.

சிக்கரியில் ‘காஃபின்’ இல்லாததால், ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உடல் உள் உறுப்புகளுக்கு அநேக நன்மைகளைச் செய்கிறது. ஈரலுக்கும் நல்லது என்கிறார்கள். விலையும் காபியைவிட மிகக் குறைவு. இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, கர்ப்பிணிகளும், குழந்தைகளும் சிக்கரியை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. நாடித் துடிப்பைக் குறைத்துவிடும் தன்மை இதற்கு உண்டு. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கக்கூடிய தன்மையும் உண்டு. இதனால் மருந்து உட்கொள்ளும் சர்க்கரை நோயாளிகள் அளவோடு பயன்படுத்தி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.