தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு இருப்பது போன்று திருமலா, ஹெரிட்டேஜ், டோட்லா, ஜெர்சி ஆகிய 4 தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் உள்ளன.
தமிழகம் முழுவதும் ஆவின் பால் 23 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 12 லட்சம் லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது.
தனியார் பால் வினியோகம் ஒரு கோடியே 25 லட்சம் லிட்டர் அளவில் உள்ளது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தனியார் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்து தமிழகத்தில் விற்பனை செய்கிறது. தற்போது திருமலா, ஹெரிட்டேஜ் ஆகிய 2 நிறுவனங்களும் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மற்ற இரு தனியார் நிறுவனங்களும் விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளன.
தனியார் பால் புல் கிரீம் ஒரு லிட்டர் ரூ.46–ல் இருந்து ரூ.48 ஆகவும், ஸ்டேண்டர் டைஸ்ட் ரூ.42–ல் இருந்து ரூ.44 ஆகவும், டோண்ட் மில்க் ரூ.38–ல் இருந்து ரூ.40 ஆகவும் டபுள் டோண்ட்மில்க் ரூ.34–ல் இருந்து ரூ.36 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்த வருடத்தில் 4–வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத் தக்கது.
ஆவின் பாலைவிட தனியார் பால் லிட்டருக்கு ரூ.13 தற்போது அதிகமாக உள்ளது. இந்த வித்தியாசத்தால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆவின் டோன்ட் மில்க் மற்றும் டபுள் டோண்ட் மில்க் ரூ.27, நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.31, புல் கிரீம் பால் ரூ.35–க்கு விற்கப்படுகிறது. பால் அட்டைதாரர்களுக்கு இதைவிட லிட்டருக்கு ரூ.2 குறைவாக வினியோகம் செய்யப்படுகிறது.
தனியார் பால் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க மாநில தலைவர் பொன்னுசாமி கூறுகையில், தனியார் பஸ் கட்டணத்தை அரசு நிர்ணயிப்பது போல தனியார் பால் கட்டணத்தையும் அரசு நிர்ணயிக்க வேண்டும். பால் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment