அதிக செலவுமிக்க நகரங்களின் தர வரிசைப் பட்டியலில் முதல்முறையாக நியூயார்க்கை விட ஷாங்காய் முன்னேறி உள்ளதாக உலகளவில் எடுக்கப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.
இது குறித்து லண்டனைச் சேர்ந்த “எகானமிஸ்ட்’ பத்திரிகையின் புலனாய்வுக் குழு வெளியிட்ட ஆய்வு அறிக்கை:
நியூயார்க்கை அடிப்படையாகக் கொண்டு உலக அளவில் 131 நகரங்களின் வாழ்க்கைத் தரம் கணக்கிடப்பட்டது.
அதில் டோக்கியோவை பின்னுக்குத் தள்ளி, போக்குவரத்து செலவினங்கள் அதிகமுள்ள சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 45-வது இடத்தில் இருந்த ஷாங்காய், நியூயார்க்கை பின்னுக்குத் தள்ளி, தற்போது 21-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
ஆசியாவில் ஐந்தாவது இடத்திலும், உலகளவில் 13-வது இடத்திலும் ஹாங்காங் உள்ளது.
கடந்த முறை எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தப் பட்டியலில் 39-வது இடத்தில் இருந்த சீனாவில் உள்ள ஷென்ஜென் நகரம் தற்போது இரண்டாவது மிகப் பெரிய செலவுமிக்க நகரமாக உள்ளது.
மேலும் உலக அளவில் செலவினங்கள் குறைந்த நகரங்களைக் கொண்டுள்ள கண்டமாக ஆசியா தொடர்ந்து நீடிக்கிறது. அதிலும் குறிப்பாக இந்திய துணைக் கண்டத்தில் உள்ள நகரங்களில் மும்பை, செலவினங்கள் குறைந்த நகரமாக உள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் காரணமாக சீன நகரங்கள் மிகுந்த செலவுள்ள நகரமாக உள்ளதாக இந்த ஆய்வறிக்கைக் குழுவின் தலைவரான ஜோன் கோப்ஸ்டேக் தெரிவித்துள்ளார்.
உணவு, உடை, போக்குவரத்து, இதர செலவினங்கள் உள்ளிட்டவற்றில் 160-க்கும் மேற்பட்ட இனங்கள் குறித்த தகவல்களை ஆய்வுக் குழுவினர் சேகரித்துள்ளனர்.
இந்த ஆய்வு, தன் நாட்டை விட்டு வெளியேறி பிழைப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோர், வணிக ரீதியாக பயணம் மேற்கொள்வோருக்கு இழப்பீடு கொடுக்கவும், நாட்டின் செலவினங்களுக்கு ஏற்ப ஊக்கத்தொகையை கணக்கிடவும் மனிதவள மேலாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.


No comments:
Post a Comment