 
                அதிமுக - பாஜக கூட்டணிக்கு தலைமை யார் என்ற கட்டத்தை தாண்டி, இரு கட்சிகளுக்கு இடையில் கூட்டணி இருக்கிறதா என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இரு கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல், தொண்டர்கள் மத்தியில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் கூட்டணி குறித்து அதிமுகவினரும், பாஜகவினரும் பேசிய கருத்துக்கள் தான் இந்த சலசலப்புக்கு காரணம். இரு மொழி கொள்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கூட்டணி வேறு, கொள்கை வேறு, கூட்டணியை விட்டு கொடுக்கலாம். ஆனால் கொள்கையை விட்டு கொடுக்க முடியாது என பாஜகவை மறைமுக விமர்சித்துள்ளார். கூட்டணி என்பது துண்டு போன்றது, கொள்கை என்பது வேஷ்டி போன்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மதுரையில்
 செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமாரும் பாஜக மாநில தலைவர் முருகனை 
சீண்டும் வகையில் பேசியிருக்கிறார். புனித ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி 
பறக்கும் என எல்.முருகன் பேசியது குறித்த கேள்விக்கு, எந்தக்கட்சி 
ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும் என்று 
பதிலளித்துள்ளார் உதயகுமார். 
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இல்லாத 
கூட்டணியை உருவாக்காதீர்கள் என செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார் அதிமுக 
எம்பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன். மத்திய அரசில் அதிமுக அங்கம் வகிக்கவில்லை. 
மாநில அரசில் பாஜக அங்கம் வகிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் 
அளித்துள்ளார். 
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அதிமுக - பாஜகவுக்கு இடையே எந்தவொரு மனக்கசப்பும் கிடையாது என்றும் இதே கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்திருக்கிறார். அதிமுக - பாஜக கூட்டணி குறித்து எழுப்பப்படும் இந்த கருத்துக்கள் உண்மையில் கூட்டணிக்குள் எழுந்துள்ள விரிசலா? அல்லது தேர்தல் நேர கணக்குகளா என்பதை காலம் தான் முடிவு செய்யும்.
 

 
No comments:
Post a Comment