எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில வாரங்களாகவே தனது சமுதாய மக்கள்
வாழும் மேற்கு மண்டலத்தில் முகாமிட்டு வருகிறார். எல்லாம் டிடிவி தினகரன்
மீதான அதிருப்தியினால்தானாம்.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 16ம் தேதி பொறுப்பேற்றபின்,
கடந்த 7ம் தேதி சேலம் வந்தார். இதில் 4 மாவட்டங்களுக்கான அரசு திட்டங்களை
தொடங்கி வைத்தார். பின்னர் மீண்டும் 14ம் தேதி வந்தார். அப்போது கட்சி
சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில்
இன்று மீண்டும் சேலம் வருகிறார். ஒரு மாதத்தில் 3 முறை சேலம்
மாவட்டத்திற்கு சென்று வந்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
கோவை, சேலத்தில் நடத்திட்ட உதவிகளை தொடக்கி வைப்பது போல அவரது பயணம்
அமைக்கப்பட்டிருந்தாலும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர்,
சேலத்தில் வசிக்கும் தனது சொந்த சமுதாய மக்களிடையே செல்வாக்கை
அதிகரித்துக்கொள்ளத்தானாம்.
எடப்பாடியை ஒதுக்கிய டிடிவி
கடந்த சில வாரங்களாகவே டிடிவி தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை
ஒதுக்கியே வைத்திருந்தார். அவரை புறக்கணித்தது அப்பட்டமாக தெரிந்தது. ஆட்சி
மன்ற குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடம் பெறவில்லை. அப்போதே ஆர்.கே.
நகருக்கு வேட்பாளர் யார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது.
நிதியமைச்சர் மாற்றம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வசம் நிதித்துறையும் இருந்தது. இது
ஆபத்தாச்சே என்று நினைத்த டிடிவி தினகரன் திடீரென நிதித்துறைக்கு சற்றும்
சம்பந்தமில்லாத மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வசம் அந்த துறையை
வழங்கினார். அப்போதே டிடிவி தினகரனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும்
இடையேயான மோதல் தெரியவந்தது.
வேட்பாளரான டிடிவி தினகரன்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் துணை
பொது செயலாளராக டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவர் வேட்பாளராக
அறிவிக்கப்பட்ட சமயத்தில் கூட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அருகில் இல்லை.
அவர் சேலத்தில் இருந்த போது வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது. டிடிவி
தினகரனை வேட்பாளராக அறிவித்தது செங்கோட்டையன் தான்.
செக் வைத்த செங்கோட்டையன்
தன்னிடம் அரசியல் பால பாடம் கற்ற எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரானதையே
விரும்பாதவர் செங்கோட்டையன். இப்போது அவர் முதல்வராக இருக்கிறார். அவரது
அமைச்சரவையில் செங்கோட்டையன் கல்வி அமைச்சராக இருக்கிறார். எப்படியாவது
முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை காலி செய்ய வேண்டும் என்ற
எண்ணத்தில் காய் நகர்த்துகிறாராம் செங்கோட்டையன். எனவேதான் டிடிவி தினகரன்
வேட்பாளர் என்பதை உற்சாகத்தோடு அறிவித்தாராம்.
அடுத்த குறி?
ஆர்.கே. நகரில் வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த குறி முதல்வராவதுதான்.
கட்சியையும், ஆட்சியையும் தனது கைப்பிடிக்குள் கொண்டு வந்து விட்டால்
அப்புறம் யாரும் அசைக்க முடியாது என்பது தினகரனின் கணக்கு. எனவேதான்
கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று நினைக்கிறாராம்.
முதல்வர் பதவிக்கு ஆபத்து
தினகரன் மீது எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிருப்தியில் இருப்பதாகவே
கூறப்படுகிறது. ஒருவேளை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெறும்பட்சத்தில்
அதன் பின்னர் ஓபிஎஸ்க்கு நெருக்கடி கொடுத்து வெளியேற்றியது போல் தனக்கும்
தினகரன் ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுப்பார்கள் என நினைக்கிறார் எடப்பாடி
பழனிச்சாமி கருதுகிறார்.
முதல்வரின் வெளியூர் டூர்
ஆர்.கே.நகரில் முக்கிய கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து பணிகளை
தொடங்கி விட்டன. டிடிவி தினகரனுக்கு ஆதரவாக மூத்த அமைச்சர் செங்கோட்டையன்
தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைத்து பணியாற்ற ஏற்பாடுகள் நடந்து
வருகின்றன. சென்னையில் இருந்தால் தானும் தேர்தல் பணிக்கு
செல்லவேண்டியிருக்கும் என்பதால் தேர்தல் முடியும் வரை வெளியூர்
நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
எதற்கும் தயார்
தனது சொந்த மாவட்டத்திலும், அதன் பின்னர் ஆதரவு எம்எல்ஏக்கள் அதிகமுள்ள
நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டத்திலும் வரும் நாட்களில் அரசு
நிகழ்ச்சிகளை அதிகளவில் நடத்தி பங்கேற்கவும் எடப்பாடி பழனிச்சாமி
திட்டமிட்டுள்ளார். தனது பதவிக்கு ஆபத்து வரும் பட்சத்தில் தனது ஆதரவு
எம்எல்ஏக்களுடன் கட்சியை உடைக்கவும் தயாராகி வருகிறாராம் எடப்பாடி
பழனிச்சாமி.
No comments:
Post a Comment