நாடா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 350 கி.மீ. தூரத்திலும்
புதுவையிலிருந்து 290 கி.மீ. தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. நாடா
புயல் நெருங்கி வருவதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களிலும் காவிரி டெல்டா
மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் பேரிடர் மீட்புக்குழுவினர் தயார்
நிலையில் உள்ளனர்.
நாடா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கும் என்று
எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என்று சென்னை
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'நாடா' புயலால் கடலோர மாவட்டங்களில் பலத்த
மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று
சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று தெரிவித்தார்.
வியாழக்கிழமை அதிகாலை முதல் மழை பெய்யத் தொடங்கும். அதன் பின்பு மழையின்
வேகம் மேலும் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை அடுத்து
இரு தினங்களுக்கு சென்னை உள்ளிட்ட புயல் தாக்கும் எச்சரிக்கப்பட்ட
மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நாடா புயல்
வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதத்துக்குப் பின்பு வங்கக் கடலில் தற்போது
நாடா புயல் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகில்
செவ்வாய்க்கிழமை உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது தென்மேற்கு
திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதன் பின்பு
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடைந்தது. ஆழ்ந்த
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புதன்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் புயலாக
மாறியது.
சென்னையில் மழை
நாடா புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கி.மீ. தூரத்திலும்
புதுவையிலிருந்து 290 கி.மீ. தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. இதன்
காரணமாக சென்னையில் மழை தொடங்கியுள்ளது. சென்னையின் நகர் பகுதிகளிலும்,
சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
நள்ளிரவு கரையை கடக்கும்
நாடா புயலானது புதுச்சேரிக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கடலூர் அருகே
இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல்
கரையைக் கடக்கும்போது பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். இதன் காரணமாக
கடலோர மாவட்டங்களில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரை சூறைக்காற்றுடன் மழை
பெய்யக்கூடும்.
டிசம்பர் 4ல் காற்றழுத்த தாழ்வு
நடா புயலானது கரையைக் கரையைக் கடந்த பின்பு, டிசம்பர் 4 ம் தேதியளவில்
வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக
வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
நாடா புயல் காரணமாக வங்கக் கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசிவருவதையடுத்து
துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டன.
பாம்பன் கடல் பகுதியில் புதன்கிழமை அதிகாலை பலத்த சூறாவளி காற்று வீசத்
தொடங்கியது. இதனால் துறைமுகத்தில் காலையில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை
கூண்டு ஏற்றப்பட்டது. காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்ததால் மாலையில்
2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு
நாகை துறைமுக அலுவலகத்திலும், காரைக்கால் தனியார் துறைமுகத்திலும் 2-ஆம்
எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இதேபோல் சென்னை, எண்ணூர்
துறைமுகங்களிலும் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
மணிக்கு 60 முதல் 100 கி.மீ. வேகத்திற்கு பலத்த காற்று வீசும், கடல்
கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று
எச்சரிக்கப்பட்டுள்ளது.
தயார் நிலையில் மீட்புக்குழு
கனமழை, வெள்ளப்பாதிப்பினால் கடந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்
மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டும் அதுபோல் வெள்ளச்சேதம் ஏற்படாமல்
தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரிடர்
மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கடலூர் அருகே புயல் கரையைக்
கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் 40 பேர் கொண்ட பேரிடர்
மீட்புக்குழுவினர் நாகை மாவட்டத்திற்கு சென்றடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment