மத்திய அரசின் புதிய அறிவிப்பால் நொந்துபோன சரவணன் சவடமுத்து என்ற
பத்திரிகையாளர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தனக்கு நேர்ந்த சோக அனுபவத்தை
பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:
டிசம்பர் 30-வரையிலும் பழைய நோட்டுக்களை வங்கியில் மட்டும் டெபாசிட்
செய்யலாம் என்று சொல்லிவிட்டு திடீரென்று இனிமேல் வெறும் 5000 மட்டுமே
டெபாசிட் செய்ய முடியும். அதுவும் ஒரே ஒரு முறைதான் என்று நவீன முகமது பின்
துக்ளககான மோடியின் அராஜக உத்தரவைத் தொடர்ந்து இன்று அனைத்து வங்கிகளிலும்
கட்டுக்கடங்காத கூட்டம்.. வாசலையும் தாண்டி நின்று கொண்டிருந்தது.
கையில் 8000 ரூபாய் மதிப்பிற்கு பழைய நோட்டுக்கள் இருந்தன. அவ்வப்போது
500, 500 ஆக வந்ததால் வேறு வழியில்லாமல் மொத்தமாக சேர்த்து வைத்து
கடைசியான நாளுக்கு முதல் நாள் கட்டிவிடலாம் என்று வைத்திருந்தேன். பரதேசிப்
பயலுக நேத்தைக்கு போட்ட உத்தரவால வயிறு கலங்கிப் போச்சு. நம்மகிட்ட
இருக்கிறதே அவ்ளோதான். அதுவும் செல்லாதுன்னா நிசமாவே பாலிடாலை குடிக்க
வேண்டிய நிலைமை..!
இன்று காலை போரூர், வளசரவாக்கம் பகுதி வங்கிகளுக்குச் சென்று அங்கே வண்டியை
நிறுத்தக்கூட இடமில்லாததை கண்டு அப்படியே சாலிகிராமத்திற்கு சென்றேன்.
அங்கே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்குக் கூட்டம்.
கொடுத்துதான் பார்ப்போமே என்றெண்ணி வரிசையில் நின்று விண்ணப்பத்தை
நிரப்பிக் கொடுத்தால் "5000-தான் ஸார் வாங்கச் சொல்லியிருக்காங்க. அதுக்கு
மேலன்னா மேனேஜர் பெர்மிஷன் வேணும். நீங்க அவர்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு
வாங்க"ன்னு இதுக்குன்னு நேத்து நைட்டோட நைட்டா பிரிண்ட் அவுட் எடுத்து
வைச்சிருந்த புது அப்ளிகேஷனை கொடுத்தாங்க..
அதையும் நிரப்பிட்டு மேனேஜரை பார்க்கப் போனேன். எனக்கு முன்னாடி 1
லட்சத்து 54000 ரூபாயை கட்டின ஒரு பார்ட்டி ஒரு சின்ன முனங்கல்கூட இல்லாமல்
கையெழுத்து வாங்கிட்டு போனாப்புல.. 'ஓகே.. அவ்ளோதான் போலிருக்கு'ன்னு
நானும் போனேன்.. நமக்குத்தான் கிரகம் உச்சில இருக்கே..!? "ஸார்.. 5000தான்
ஸார் வாங்கச் சொல்லியிருக்காங்க. சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ஆர்டர் ஸார்"
என்றார் மேனேஜர்.
'ஏன் இதுவரையிலும் கட்டவில்லை?' என்கிற இடத்தில் "டிசம்பர் 30 வரையிலும்
சொல்லியிருந்ததால் மெதுவாகக் கட்டலாம் என்று காத்திருந்தேன்..." என்று
எழுதியிருந்தேன். படித்தார். "இது ஓகே ஸார்.. ஆனால் 5000-தான்..." என்று
இழுத்தார். 'இந்தப் பணம் வந்ததுக்கு வழி எது..?' என்று அடுத்து ஒரு கேள்வி
கேட்டிருந்தார்கள். அதை நிரப்பாமல் வைத்திருந்தேன். "இதுக்கு என்ன ஸார்
பதில்?" என்றார்.
"சினிமா ரிப்போர்ட்டரா இருக்கேன். நிகழ்ச்சிக்கு போகும்போது கிடைத்த
பணம்தான் இது. இன்னும் 10 நாள் இருக்கிறதால கிடைக்கிறதை ஒரே நாள்ல மொத்தமா
டெபாசிட் செய்யலாம்னு காத்திருந்தேன். இதுல ஒரு படத்துக்கு வாங்கின
விளம்பரக் கட்டணும் சேர்த்தி.." என்றேன். நெற்றியைச் சுருக்கினார் மேனேஜர்.
"இப்போ நீங்க சொன்னதை அப்படியே இதுல எழுதிருங்க..." என்றார். எழுதினேன்.
இன்னமும் மனம் ஒப்பாமல் யோசித்தார்.
உடனே எனது செல்போனில் எனது இணையத்தளத்தை திறந்து காட்டி அதில் இருந்த
விளம்பரத்தையும் காட்டி, "அதுக்கு கிடைச்ச பணம்தான் ஸார்" என்றேன். கூடவே,
எனது விஸிட்டிங் கார்டை கொடுத்தேன். அதையும் அந்த விண்ணப்பத்துடன் சேர்த்து
பின் செய்து கொண்டார். "இட்ஸ் ஓகே.. இனிமேல் கட்ட முடியாது ஸார். இதான்
ஸார் கடைசி.. பார்த்துக்குங்க..." என்று ஏதோ போனால் போகுதேன்னு பிச்சை
போடுற மாதிரி நினைச்சு கையெழுத்து போட்டார் மனுஷன்.. கட்டிட்டு
வந்தாச்சு..!
இதெல்லாம் நமம தலையெழுத்து..! நாம உழைச்சு சம்பாதிக்கிற காசை டெபாஸிட்
செய்யவே இத்தனை கேள்விகள்..! இந்திய மக்களை இப்படி மானம், ரோஷம், வெட்கம்,
சூடு, சொரணையில்லாதவங்களாவும் இந்த மோடி மாத்தியிருக்காப்புல..இவ்வாறு அவர்
பதிவிட்டுள்ளார்.


No comments:
Post a Comment