தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக 5 அமைச்சர்கள்
போர்க்கொடி தூக்கியுள்ளனர். சசிகலாவே முதல்வராக வேண்டும் என்று அமைச்சர்கள்
எடப்பாடி பழனிச்சாமி, ஆர்பி உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர்
ராஜு, எம்சி சம்பத் ஆகியோர் வலியுறுத்தி வருவதால் முதல்வர்
பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வர் பதவியை தங்களுக்கோ அல்லது அமைச்சர்
எடப்பாடி பழனிச்சாமிக்கோ அளிக்க சசிகலா நடராஜன் தரப்பு விரும்பியது. ஆனால்
மத்திய அரசின் நெருக்கடியால் ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார்.
முதல்வர் பதவியை வகிக்கும் ஓ. பன்னீர்செல்வமே கட்சியின் பொதுச்செயலராவார்
என அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் திடீரென சசிகலா தம்மை
பொதுச்செயலராக்குவதற்கான நடவடிக்கைகளில் படுதீவிரமாக உள்ளார்.
சசிகலா மீது அதிருப்தி
அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலானோர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இது அதிமுக தொண்டர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
முதல்வர் பதவியும் சசிகலாவுக்கே
தற்போது சசிகலாவே முதல்வர் பதவியையும் ஏற்க வேண்டும் என அமைச்சர்கள்
ஒவ்வொருவராக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அமைச்சர்கள் எடப்பாடி
பழனிச்சாமி, ஆர்பி உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜு, எம்சி
சம்பத் ஆகியோர் வெளிப்படையாகவே சசிகலாதான் முதல்வராக வேண்டும் என கூறி
வருகின்றனர்.
பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி
அத்துடன் அமைச்சர் ஆர்பி உதயகுமாரோ, முதல்வர் பதவியில் இருந்து ஓ.
பன்னீர்செல்வம் விலகுவார் என்றும் கூறியுள்ளார். ஓ. பன்னீர்செல்வத்தை
முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைக்கத்தான் அமைச்சர்கள் இப்படி
பேட்டி கொடுத்து நெருக்கடி கொடுக்கின்றனர் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
அதிர்ச்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர்
சென்னை திரும்புவதற்குள் இன்னும் எத்தனை அமைச்சர்கள் அவர் "ராஜினாமா
செய்வார்" என்று சொல்லியே நெருக்கடி கொடுப்பார்களோ என புலம்புகின்றனர் ஓ.
பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.


No comments:
Post a Comment