தமிழக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ள செப்டம்பர் 16-ந் தேதி முழு
அடைப்புப் போராட்டத்துக்கு மதிமுக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலர்
வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரிப் பிரச்சினையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை செயல்படுத்த
வேண்டிய கடமையும் பொறுப்பும் கர்நாடக மாநில அரசுக்கு இருக்கிறது. ஆனால்,
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடகாவில் தலைதூக்கி உள்ள
வன்முறைகளை அம்மாநில அரசே ஊக்குவிக்கின்ற போக்கு கடும் கண்டனத்துக்கு
உரியது.
கர்நாடகத்தில், தமிழக பதிவெண் கொண்ட 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் உட்பட
200 வாகனங்கள் கன்னட இனவெறிக் கும்பலால் தீ வைத்து எரித்து
சாம்பலாக்கப்பட்டுள்ளன. அப்பாவி தமிழர்கள் மீதும், தமிழர்கள் நடத்தும் வணிக
நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மீதும் வன்முறை கும்பல் திட்டமிட்டு
தாக்குதல் நடத்துகின்றது.
மெளன மத்திய அரசு
தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்தி பாதுகாப்பு வழங்காமல்,
கர்நாடக மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது. அம்மாநில அரசை கண்டிக்காமல்,
மத்திய அரசு மௌன சாட்சியாக அமைதி காக்கிறது.
மத்திய அரசின் வஞ்சகம்
இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் சிக்கலுக்கு சட்டபூர்வமாக
அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை
வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு அமைக்காமல் மத்திய பா.ஜ.க. அரசு
தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைத்து வருவது தமிழ்நாட்டுக்கு எதிரான வஞ்சகப்
போக்கு ஆகும்.
செப்.16-ல் முழு அடைப்பு
உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு படி தமிழகத்திற்கு உரிய நீரை
காவிரியில் திறந்துவிட வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழ்நாட்டுக்கு
எதிராக நடந்துவரும் வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை
வாரியம், ஒழுங்குமுறைக் குழு அமைக்க வலியுறுத்தியும் அனைத்து விவசாய
சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் செப்டம்பர் 16 அன்று தமிழகத்தில் முழு
அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
ரயில் மறியல் போராட்டத்தில் மதிமுக
செப்டம்பர் 16 இல் நடைபெறும் தொடர் வண்டி மறியல் போராட்டம், சாலை மறியல்
அறப்போராட்டங்களில் மறுமலர்ச்சி திமுக தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறேன். தமிழ் நாட்டின் உயிர் ஆதாரமான காவிரியில் நமது உரிமையை
நிலைநாட்ட முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறு தமிழக
மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
No comments:
Post a Comment