Latest News

ஓ மை கடவுளே... ஒரு "தலை"யும் கிடைக்கலையே.. தவிக்குது தடுமாறுது தமிழக காங்கிரஸ்!


தமிழக காங்கிரஸுக்கு இதுவரை இப்படிப்பட்ட ஒரு சோகம் ஏற்பட்டதே இல்லை. ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது கட்சி மேலிடம். வேறு வழியே இல்லாவிட்டால் தற்காலித் தலைவரையாவது நியமிப்போம் என்று கூறும் அளவுக்கு போய் விட்டதாம் நிலைமை. தலைவர் பெயராக யாரைப் பரிசீலித்தாலும் ஒரு பத்துப் பதினைந்து தலைவர்களாவது வந்து அதை ஆட்சேபித்தால் பிறகு எப்படித் தலைவரை நியமிக்க முடியும் என்று மேலிடத் தரப்பில் எரிச்சல்படுகிறார்களாம்.

இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போன பிறகு புதிய தலைவரை நியமிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது கட்சி மேலிடம். திருநாவுக்கரசர், ப.சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், கராத்தே தியாகராஜன், குஷ்பு என பல தரப்பினரும் தலைவர் பதவியைப் பெற தாறுமாறாக முயன்று பார்த்தனர். இதில் ஒருவரை ஒருவர் காலை வாரி விடும் வேலையும் சுபமாக நடந்து முடிந்தது. இப்படி ஆளாளுக்கு போட்டுக் குழப்பியதால் தலைவர் நியமனத்தையே ஒத்திவைத்து விட்டதாம் காங்கிரஸ் மேலிடம். இதுவரை தலைவர் பதவிக்கு யாரையும் இறுதி செய்ய முடியாமல் இருக்கிறது காங்கிரஸ் மேலிடம். மிகப் பெரிய சோகமாக இதை மற்ற கட்சியினர் கிண்டலாக வர்ணிக்கிறார்கள். ஒரு தலைவரைக் கூடவா காங்கிரஸால் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்று சிரிக்கிறார்கள். தலைவர் என்று யாரும் இல்லாத காரணத்தால் நேற்று சத்தியமூர்த்தி பவனில் நடந்த சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின்போது யார் கொடியேற்றி வைப்பது என்பதில் பெரும் குழப்பமாகி, கடைசியில் வேட்டி சட்டை கிழியாத அளவுக்கு நல்லபடியாக கொடியேற்றி வைத்து விட்டுக் கலைந்தனர் காங்கிரஸார். இந்த நிலையில் தேவைப்பட்டால் தற்காலிகத் தலைவர் நியமிக்கப்படுவார் என்று காங்கிரஸ் மேலிடப் பார்வையாளரான சின்னா ரெட்டி என்பவர் கூறியுள்ளார். தற்போது அந்தத் தற்காலிகத் தலைவர் பதவியைப் பிடிக்கவும் அடிதடி ஆரம்பித்து விட்டதாக சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.