ஒவ்வொரு நாளும் காலை வேளையில் சத்தான உணவை உண்பதை எக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்கக்கூடாது என ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் நமக்கு தெரிவித்துள்ளன. வேல்ஸ் நாட்டின் கார்டிப் பல்கலைக்கழகமும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கிடையே காலை உணவின் முக்கியத்துவத்தை பற்றி ஆராய்ச்சி நடத்தியது.
இந்த ஆய்வு நூறுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் 9-11 வயதுள்ள சுமார் ஐந்தாயிரம் சிறுவர், சிறுமியரிடையே ஆறு முதல் பதினெட்டு மாதங்களுக்கு நடத்தப்பட்டது.
இனிப்பு மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து, காலை வேளையில் சத்தான ஆகாரத்தை உட்கொள்ளும் குழந்தைகளின் செயல்திறன் சீராக இருந்ததாக அந்த ஆய்வின் முடிவு தெரிவித்தது.
நமது தமிழகத்திலும் காந்தி கிராம பல்கலைக்கழக அறிவுசார் அறிவியல் துறை ஆராய்ச்சியில் 70 சதவீதம் கல்லூரி மாணவிகள் மற்றும் மாணவர்களும் கல்லூரி செல்லும் அவசரத்தில் காலை உணவை எடுத்துக் கொள்வதில்லை என்பதால் அவர்களால் காலை நேர கல்லூரி வகுப்புகளில் கவனம் செலுத்த முடிவதில்லை என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
பொதுவாக தமிழகத்தின் இப்போதைய காலை உணவுகள் முதலில் காலை எழுந்தவுடன் காபி, டீ, ஆவி பறக்க இட்லி, சுடச் சுட தோசை, வேறு வழியில்லாமல் உப்புமா, பொங்கல், ரொட்டி, கம்பெனி உணவுகள் என இருக்கிறது.
நமது உடலைப் பொறுத்தவரை காலையில் எழுந்தது முதல் ஒரு சில மணி நேரத்திற்கு உடம்பு சுத்தப்படுத்தும் வேலையை சிறப்பாகச் செய்யும். அதற்கு வாய்ப்பு தர வேண்டும். சுத்தப்படுத்துவதற்கு உதவி செய்யும் நீரையும் நீர் ஆகாரங்களை சாப்பிட வேண்டும்.
நமது முன்னோர்கள் கிராமங்களில் காலை உணவாக சிறிதளவு மாவுப் பொருளும் (சோறு, கூழ், கஞ்சி) அத்துடன் நிறைய தண்ணீரும் சேர்த்து குடித்து விட்டு மண்ணில் காற்றில் வெய்யிலில் உழைப்பில் ஈடுபட்டார்கள். அப்போது நிறைய தண்ணீர் குடிப்பார்கள். உடம்பு தூய்மையான பின்புதான் மதியம் முக்கிய உணவு உண்பார்கள். இரவு உணவும் நேரத்தில் சாப்பிட்டு விடுவார்கள்.
இன்றைய நமது நாகரீக வாழ்வும், உடல் உழைப்பை அதிகம் வேண்டாத வாழ்க்கை முறையும் நம்முடைய பாரம்பரிய உணவு முறைகளை இல்லாமலாக்கியுள்ளது.
ஓரளவுக்கேனும் நமது உணவுப் பழக்கத்தை சீராக்க பின்வருகிற குறிப்பை நடை முறைப்படுத்தலாம். காலை உணவு திரவ உணவாகத்தான் இருக்க வேண்டும். முதலில் தண்ணீரை தாராளமாகக் குடித்து குடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். அடுத்து பழச்சாறுகளையும், பழங்களையும் சாப்பிடலாம். சீரகம், கொத்தமல்லி, சுக்கு போன்றவற்றுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து காபி போல தயாரித்து சாப்பிடலாம்.
இயற்கை மருத்துவ முறைப்படி, பூசணி சாறு, அருகம்புல் சாறு, இளநீர் போன்றவற்றை சாப்பிடலாம். இவை அமிலத்தை குறைத்து ஆல்கலைன் தன்மையை உண்டாக்கும்.
காலை உணவு சிறுதானிய கஞ்சியாக இருக்கலாம். அதில் தேங்காய் துருவல் மட்டும் சேர்த்தால் போதும். தேங்காயில் மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துகளும் உள்ளன. இது தாய்ப்பாலுக்கு சமமானது.
இப்போது அமெரிக்காவில் கோதுமை உணவை மக்கள் தவிர்க்கிறார்கள். இது குளுடன் லிஸ்டில் வருகிறது. கோதுமையில் உடல் எடை குறையும் என்பதும் சர்க்கரை நோய் குணமாகும் என்பதும் தவறு.
நன்றி : சமூகநீதி அறக்கட்டளை


No comments:
Post a Comment