நியூயார்க்: உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஹைட்ரஜன் குண்டு சோதனையை தொடர்ந்து ராக்கெட் சோதனை நடத்திய வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிப்பது குறித்து அமெரிக்காவும், சீனாவும் கூட்டாக ஆலோசனை நடத்தி வருகின்றன. உலக நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்ப்பை மீறி வடகொரியா அவ்வப்போது அணுகுண்டு சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி அணுகுண்டை போல பல மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை சோதித்து பார்த்தது. இதற்கு அ்மெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் உலக நாடுகளை மீண்டும் எரிச்சல் படுத்தும் வகையில் செயற்கை கோள் ராக்கெட்டை நேற்று வடகொரியா விண்ணில் செலுத்தியது. இது அறிவியல் சார்ந்த ராக்கெட் அல்ல என்றும், கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. 
இந்த சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த செயல் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளை கடுமையாக ஆத்திரமூட்டியுள்ளது. வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிப்பது குறித்து அமெரிக்காவும், சீனாவும் கூட்டாக ஆலோசித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை வட்டாரங்கள் தெரிவித்தன.  இந்த பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நேற்று அவசரமாக கூட்டப்பட்டது. 
 


 
No comments:
Post a Comment