சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவுக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது டெல்லி ராணுவ மருத்துவமனை நிலையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை அடுத்த 48 மணிநேரத்துக்கும் அபாய கட்டத்திலேயே இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள உலகின் மிக உயரமான போர்முனையான சியாச்சின் மலைச் சிகரத்தில் கடந்த புதன்கிழமையன்று பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. 19 ஆயிரம் அடி உயரத்தில் நிகழ்ந்த இப் பனிச்சரிவில் தமிழக வீரர்கள் 4 பேர் உள்பட மெட்ராஸ் ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த 10 ராணுவ வீரர்கள் சிக்கினர்.
இவர்கள் அனைவரையும் மீட்கும் பணி 2 நாட்கள் நடைபெற்றது. பின்னர் 10 பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் 10 பேரின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறந்ததாக கருதப்பட்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா நேற்றிரவு நடைபெற்ற மீட்பு பணியின்போது உயிருடன் மீட்கப்பட்டார். 25 அடி ஆழத்தில் உறைபனிகளுக்கு நடுவில் மைனஸ் 45 டிகிரி குளிரில் கடந்த 6 நாட்களாக அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டு உடனடி சிகிச்சைகள் அளித்தனர். அங்கிருந்து தோயிஸ் விமான படை தளத்துக்குக் கொண்டுவரப்பட்டு ராணுவ விமானம் மூலம் டெல்லி அழைத்துவரப்பட்டார். டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஹனுமந்தப்பா கோமா நிலையில் இருக்கிறார். அவரது உடல்நிலையை இயல்பான நிலைக்கு கொண்டுவரவும் ரத்த ஓட்டம் சீராகவும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. நரம்புவழியே திரவங்கள் செலுத்தப்பட்டும் எளிதாக வெளிகாற்றை சுவாசிக்க செய்யும் வகையிலும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக உறைபனியில் சிக்கியிருந்ததால் அவரது சிறுநீரகம் செயலிழந்து போயுள்ளது. அவருக்கு நரம்பியல்துறை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


No comments:
Post a Comment