கேரளாவில் மதுபான பார்களை திறக்க லஞ்சம் வாங்கிய வழக்கில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அம்மாநில நிதி அமைச்சர் கே.எம். மானி இன்று ராஜினாமா செய்துள்ளார். கேரளாவில் மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் படிப்படியாக பார்களையும் கடைகளையும் அம்மாநில அரசு மூடியது. இந்த நிலையில் மூடப்பட்ட மதுபார்களை திறக்கிறேன் என உறுதி அளித்து பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பிஜூ ரமேஷிடம் ரூ1 கோடி லஞ்சம் வாங்கினார் நிதி அமைச்சர் கே.எம். மானி என்பது புகார்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மானி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. கடந்த ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில்லை எனவும் முடிவு செய்திருந்தனர். இதை எதிர்த்து திருவனந்தபுரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட்னா. இவற்றை கடந்த அக்டோபரில் விசாரித்த நீதிமன்றம், நிதி அமைச்சர் கே.எம். மானிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் அவர் மீது தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. கேரளா அரசியலில் இது பெரும் புயலைக் கிளப்பியது. மானி, கேரளா காங்கிரஸ் (எம்) கட்சியைச் சேர்ந்தவர். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என்பதில் இடதுசாரிகள் உறுதியாக இருந்தனர். ஆளும் காங்கிரஸ் தலைமையிலான முன்னணியிலும் மானிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அத்துடன் சொந்த கட்சியிலும் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதால் மானி இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார்.
No comments:
Post a Comment