(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்டி. ஐ.பீ.எஸ்(ஓ)
இந்திய அரசமைப்புச் சட்டம் (கான்ஸ்டிடூஷன்) 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள் அமுலுக்கு வந்தது. அதன் பிரிவு 14ன் படி அரசு, இந்திய ஆட்சிப் பரப்பிற்குள் உள்ள எவருக்கும் சட்டத்தின் முன்னர் சமம், சட்டங்களின் சமத்தினை மறுத்தல் ஆகாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது. பிரிவு 15ன் படி சமயம், இனம், குலம், பாலினம், பிறப்பிடம் இவற்றை மட்டுமோ, அவற்றில் எதனை மட்டுமோ காரணங்களாக் கொண்டு, குடிமக்கள் எவருக்கும் எதிராக அரசு வேற்றுமை பாராட்டக்கூடாது.
அரசு என்பது ஒரு நாட்டின் தூண்களாக கருதப்படும் நீதி, அரசு, மக்களவை போன்ற மூன்றையும் பொருந்தும். ஆனால் உத்திர பிரதேசத்திலுள்ள ஆயோத்தியாவில் பாரம்பரியமிக்க தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாடிலிருந்த பாபரி மஸ்ஜிதை 1992 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 6ந்தேதி திராவிட இனத்தலைவரால் ஒரு தடவை பண்டாரம், பரதேசி என்றழைக்கப்பட்டவர்களால் இடித்துத்தள்ளப்பட்டதின் மூலம் சர்வதேச நாட்டுமக்கள் முன்பு இந்திய நாட்டின் இறையாண்மையினை சந்தேகிக்க வாய்ப்புக் கொடுத்தது மட்டுமல்லாமல், அதன்பின்பு நடந்த கலவரங்களில் கணக்கற்ற பொருட்சேதம், 2000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டும் ஒரு நீங்கா வடுவினை அண்ணன்-தம்பிகளாக வாழ்ந்த இந்திய துணைக்கண்டத்தில் ஏற்படுத்தி விட்டனர் என்றால் மிகையாகுமா?
பாபர் படையெடுத்தாராம், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை இடித்து மஸ்ஜித் 1528 ஆம் ஆண்டு எழுப்பப்பட்டதாம் என்ற கதை. ஏன் ஆயோத்தியில் மஸ்ஜித் கட்ட கோவிலைத் தவிர இடமா இருந்திருக்காது? அது என்ன மக்கள் குறைந்த இடத்தில் அதிகமாக மக்கள் வாழும் பம்பாய், புதுடெல்லி, கல்கத்தா போன்ற நகரமாவா இருந்திருக்கும்? பெரும்பாலான மக்களின் மத, இன துவேசத்தினைத் தூண்ட என்ன கருவி வேண்டும் அவர்களுக்கு இதனைத் தவிர? ஆனால் இஸ்லாம் மார்க்கத்தினை ஏற்றுக் கொண்டு பக்கத்து நாடுகளில் படையெடுத்த முஸ்லிம் தளபதிகளுக்கு ரஸ_லுள்ள ஹ_தைபியா உடன்படிக்கையில் ஏற்படுத்திய முன்மாதிரி தான் செயல் படுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அப்படியென்ன கட்டுப்பாடு அந்த தளபதிகளுக்கு என்று கேட்கிறீர்களா? அன்னிய நாட்டில் படையெடுத்துப் போகும்போது எந்த பயிரினங்களையும,; நாசம் விளைவிக்கக்கூடாது, மரங்களை வெட்டக்கூடாது, கால்நடைகள் சாப்பிடக்கூடிய வைக்கோல், புல்களை சேதப்படுத்தக்கூடாது, வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள், ஆகியோருக்கு தீங்கிழைக்கக்கூடாது, அடுத்தவர் மதங்களையும், அவர்கள் வழிபடும் தலங்களுக்கும் சேதம் விளைவிக்காது அவர்களை போதனை மூலம் இஸ்லாத்தின் ஏகத்துவத்தின் பாதைக்கு திருப்ப வேண்டும் எனபது தான்.
மெடீவல் காலம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட வரலாற்று இடைப்பட்ட காலத்தில் ஒரு நாட்டின் மீது அடுத்த நாட்டு மன்னர் படையெடுத்துப் போகும் போது பல்வேறு அத்து மீறல்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகில் மற்ற பகுதியிலும் நடந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஏன் இன்று கூட அதுபோன்ற அத்து மீறல்கள் பாலஸ்தீன இளைஞர்கள் மீதும், பாலஸ்தீனர்களுக்கு உதவிப்பொருள்கள் கப்பலில் கொண்டு சென்ற செஞ்சலுவை சங்கத்தினர் மீதும் இஸ்ரேயில் நாட்டினர் நடத்திக் கொண்டுதான் உள்ளனர். இங்கு கூட மக்கள் போராட்டம் என்ற போர்வையில் பஸ்களை-அரசு வாகனங்களை கொழுத்துவது, பசுமையான நிழல் தரும் மரங்களை வெட்டி போட்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்வது போன்ற செய்திகளை அன்றாடம் பத்திரிக்கை வாயிலாக அறிகிறோம். இந்திய நாட்டு போலிஸ் சட்டம் 1861ன்பிரிவு 30 மற்றும் 30ஏ படி வன்முறையானர்களை கலைக்க வேண்டுமென்றால் முதலில் மெகாபோனில் எச்சரிக்கையும், அதன்பின்பு கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீர் குழாய் மூலமும், அதன்பின்பு லத்தியினை உபபோகித்தும,; அதற்கும் கட்டுப்படாவிட்டால் துப்பாக்கி உபயோகித்து ரப்பர் குண்டுகளையும், அதற்கும் கட்டுப்படாவிட்டால் குறைந்தளவு துப்பாக்கி பிரயோகம் செய்ய வேண்டுமென்றும் கூறுகிறது.. ஆனால் தொலைக்காட்சியில் கல்லெறியும் காஷ்மீர் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மீது போலீஸார் திருப்பி கல்லெறியும் காட்சி எந்த சட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு தெரியவில்லை.
அதுபோன்ற சில நிகழ்வுகள் வரலாற்று இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்டாலும் பாரம்பரியமிக்க புராதான பள்ளிவாசல் கட்டி முடித்து தொழுகை நடத்திக் கொண்டிருந்த பள்ளிவாசலினை பாபர் பிறந்தார் என்று நவீன நாகரீக காலத்தில் 1949 ஆம் ஆண்டு ராமர் சிலையினை பள்ளிவாசலில் வைத்து அதனை தொடர்ந்து மத நல்லிணக்கத்திற்கு விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் ஏற்பட்டு அதன் உச்சக்கட்டமாக அந்தப்பள்ளியும் தரைமட்டமாக்கப் பட்டு மகிழ்ந்தவர்கள் ஹிந்துத்துவா அமைப்பினர் பிற்காலத்தில் அதன் தலைவர்கள் நாட்டினை ஆளும் நிலைக்கு வந்தார்கள் என்பது ஆச்சரியமா தெரியவில்லையா?. ஏனென்றால் அதே திராவிடத்தலைவர்கள் அவர்கள் ஆட்சிக்கு மாரிமாரி ஆதரவு தெரிவித்து அந்த அமைச்சரவையிலும் இடம்பெற்றார்கள். அதன் விளைவுதான் 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் சம்பவத்திற்குப் பிறகு மனிதக் கொலைகள் ஏற்பட்ட போது இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே இந்தியாவின் மதசார்பற்ற கொள்கையினை சந்தேகத்திற்குள்ளாக்கியது என்றால் உண்மையில்லையா?
சென்ற வாரம்(செப்டம்பர்மூன்றாம் வாரம் 2010) திண்டுக்கல்லில் உள்ள மலைக்கோட்டையில் உள்ள கோயில் புராதாண சின்னங்கள் பாதுகாக்கும் தொல் பொருள் துறையின் கட்டுப்பாடில் இருக்கும் போதே புதிதாக ஒரு சிலையினை ஹிந்துத்துவா அமைப்பினர் வைத்து அதன் மூலம் ஒரு பதட்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஆனால் மாநில அரசு அதிகாரிகளும், தொல் பொருள் துறையும் தலையிட்டு அந்தச் சிலையினை அகற்றி அமைதி ஏற்படுத்தவில்லையா? அது போன்று 1949ஆம் ஆண்டு மத்திய அரசும் மாநில அரசும் பாபரி மஸ்ஜித் வளாகத்தில் ராமர் சிலை வைத்தபோது அதனை எடுத்திருந்தால் 50ஆண்டு இந்து-முஸ்லிம் கசப்புணர்ச்சி ஏற்பட்டிருக்குமா? அல்லது பாபரி மஸ்ஜித் தான் இடிக்கப்பட்டு மதசார்பற்ற நாடு என்ற கொள்கைக்கு களங்கம் சர்வதேசத்தில் ஏற்பட்டிருக்குமா? அதே போன்று தான் குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் விபத்திற்குப் பின்னர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் கண்கள் கலங்க ஏற்பட்ட மனித கொலைகளில் 2000பேருக்கு மேல் உயரிழந்ததும் அன்றைய மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து தடுத்திருந்தால் பிற்காலத்தில் அரசியல் வாதிகளான அமித்ஷா மற்றும் உயர்காவல் துறை அதிகாரிகள் கூட்டணியில் சொகுராபுதீன், அவர் மனைவி, சொகுராபுதீன் நண்பர் பிரஜாபதி, இசாரத் ஜஹான் போன்றவர்களின் உயிர்கள் போலி என்கவுண்டரில் பறியோயிருக்குமா?
போலி என்கவுண்டரில் உச்ச நீதிமன்றம் தலையிட்டதால் தானே முன்னாள் சி.பி.ஐ. டைரக்டர் ஆர்.கே. ராகவன் தலைமையில் ஒரு நியாயமான எஸ்.ஐ.டி விசாரணை நடந்து கொண்டுள்ளது. அந்த குஜராத் உள்துறை முன்னாள் அமைச்சர் அமித் சாவினை பாபரி மஸ்ஜித் இடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் துணை பிரதமர் அத்வானி ஜெயில் சென்று ஆறுதல் கூறியது தொலைக்காட்சியிலும், பத்திரிக்கைகளிலும் வந்தது. அதேபோல மாலேகான் குண்டு வெடிப்பில் கைதாகி உள்ள பெண்சாமியார் பிராக்யா சிங்கை பாபரி மஸ்ஜித் இடிப்பின் போது மகிழ்ச்சியில் திளைத்த உமாபாரதி அவருக்கு பாராளுமன்றத்தில் போட்டியிட இடம் ஒதுக்குவதாக அவரை சந்தித்த பின்னர் அறிவித்தார். ஆனால் கோவை குண்டு வெடிப்பில் கைதான இளைஞர்களை முஸ்லிம் அரசியல் வாதிகள் எவரும் 1998ஆம் ஆண்டு சிறையில் சென்று பார்க்காததின் மூலம் நாங்கள் நடுநிலையாளர்கள் என்று உணர்த்தவில்லையா?
பள்ளிவாசலினை இடித்தக் கட்சிக்காரர்கள் ஆட்சி நடந்தபோது பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தினை முஸ்லிம்கள் தானாக முன்வந்து இடித்தவர்களிடம் தாரை வார்க்க வேண்டுமென்ற ஒரு சமாதான கூட்டம் காஞ்சி சங்கரராமன் புகழ் ஆச்சாரியார் தலைமையில் புதுடெல்லியில் நடந்தது. அனைவரும் அறிவர். அதற்கு முஸ்லிம் அமைப்பினர் ஒத்துக் கொள்ளவில்லையென்று கோபமாக ஆச்சாரியார் வெளிநடப்பு செய்ததினை தொலைக்காட்சிகள் வெளியிட்டன என்பதினையும் அறிவர். அப்படியிருந்தும் அந்த ஆச்சாரியாருக்கு மதநல்லினக்கத்திற்காக டி.நகர் வரும்போது அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு முஸ்லிம் தங்கவியாபரிகள் அளித்து விளம்பரப்படுத்தியதும் தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும் வந்தது முஸ்லிம்கள் எவருக்கும் எதிரியாக இல்லை என்பதினையே குறிக்கவில்லையா?.. 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாத அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு 24.9.2010 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழங்கட உள்ளது என்று போலீஸாரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, பல அடுக்குப் பாதுகாப்பும் போடப்பட்டு, கலவரம் நடந்தால் அதனை அடக்க லத்திகள் மட்டும் ரூபாய் 72 கோடிகளுக்கு வாங்கப்பட்டதாகவும் ஆனால் அந்த தீர்ப்பு தள்ளிப்போட்டது மூலம் அரசுக்கு வீணான செலவுதான,; என்றைக்குச் சொன்னாலும் தீர்ப்பு தீர்ப்புதான், அதனை தள்ளிப்போடுவதின் மூலம் இன்னும் ஆவலை தூண்டிவிட்டு அரசுக்கு வீணான செலவு தான் என்றும், இஸ்லாமியர்களும், இந்து மக்களும் அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறோம் ஆனால் சில அரசியல் தலைவர்கள் எங்களது ஒற்றுமையினை குலைக்கப் பார்க்கிறார் என்றும் 24.9.2010ந் தேதியிட்ட மாலைமலர் வாசகர்கள் கூறுவதாக பக்கம் 7ல் வெளிடப்பட்டுள்ளது.. இது எதனை பிரதிபலிக்கிறது. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். சட்டம் ஓர் இருட்டறையல்ல. மதசார்பற்ற கொள்கைகொண்ட இந்தியாவின் புகழை உயர்த்த பாபரி மஸ்ஜித் தீர்ப்பு இருக்குமென்று நடுநிலையாளர்கள் கூறுகிறார்கள். பாபரி மஸ்ஜித்துக்கு வைத்த சீலினை உடைத்து ராமர் சிலை வழிபாட்டிற்கு வித்திட்ட மாவட்ட நீதபதி பிற்காலத்தில் ஹிந்துத்துவா இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதால் நீதியின் மீது முஸ்லிம்களுக்கு சந்தேகமிருந்தாலும் எல்லோரையும் ஒரே தராசில் இடைபோடாது நடப்பவை நாட்டிற்கு நல்லவையாக இருக்கும், அதுவும் ததிகனத்தம் போட்டு நடக்கும் காமன் வெல்த் நாடுகளின் தடகளைப் போட்டிற்கு எந்த ஊறும் வராது தீர்ப்பு அமைய வேண்டுமென்பதால்கூட தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருக்கலாம். ஆகவே எல்லோரும் எதிர்பார்க்கிற நீதி இருட்டறையில் நிச்சயம் மறைந்து விடாது என நம்பி அமைதி பெறுவோம்.
நன்றி : முதுகுளத்தூர்.காம் http://mudukulathur.com/?p=2335
No comments:
Post a Comment