கோவையில் நேற்று மாலை முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன்
காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்கிற வானிலை. மக்கள்
எதிர்பார்த்தது போல மழை பெய்யவில்லை.

ஆனால், யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக
மக்கள் வீட்டில் இருந்ததால், தொடக்கத்தில் அந்த நிகழ்வை யாரும்
கவனிக்கவில்லை.
இதனிடையே, பிரதமர் மோடி நேற்று இரவு 9 மணிக்கு
வீடுகளில் மின் விளக்கை அணைத்துவிட்டு, விளக்கு ஏற்ற சொன்னதற்காக மக்கள்
வெளியே வந்தனர். அப்போதுதான் வானில் தெரிந்த அந்த நிகழ்வை அதிசயமாகப்
பார்க்கத் தொடங்கினார்கள். நிலாவைச் சுற்றி வட்டம் போல ஒன்று தெரிந்தது.
இதைப்
பார்த்து ஆச்சர்யமடைந்த பலரும், அதைப் போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில்
பதிந்தனர். சிலர், விளக்கு ஏற்றும் நேரத்தில் நிலாவைச் சுற்றி வட்டம்
தெரிந்ததை, 'என்னமோ நடக்கிறது' என்று வியந்தனர்.
உண்மையில்,
நிலாவைச் சுற்றி வட்டம் தெரிந்ததற்கான காரணம் குறித்து பேராசிரியர்
மணிகண்டனிடம் பேசினோம். ``இங்கிருந்து பார்ப்பதற்கு நிலாவைச் சுற்றி வட்டம்
இருப்பது போல தெரியும். ஆனால், நிலாவைச் சுற்றி எந்த வட்டமும் இல்லை.
பூமிக்கு மேல் குறிப்பிட்ட தூரத்துக்குதான் காற்று இருக்கும். அதன் பிறகு
காற்று இருக்காது. பூமியில் உள்ள நீர் நீராவியாக மாறி மேலே சென்றுவிடும்.
அதுதான்
வட்டம் போல தெரிகிறது. நிலாவின் வெளிச்சம் அதன் வழியே புகுந்து வரும்போது,
இப்படி தெரியும். அது சின்னவட்டமாக இருக்கிறது என்றால் மிகவும் தொலைவில்
இருக்கிறது என்று அர்த்தம்.
பெரிய வட்டமாக இருந்தால் அருகில்
இருக்கிறது என்று அர்த்தம். இப்படி தோன்றும்போது ஈரப்பதம் அதிகம்
இருக்கிறது என்பது அறிகுறி. இதைத்தான் நம் முன்னோர்கள் 'தூரவட்டம், சேரமழை'
என்று சொல்வார்கள். அப்படி தோன்றும்போது மழை பெய்வற்கான வாய்ப்பு அதிகம்.
ஆனால், வட்டம் அருகில் தெரிந்தால்தான் மழை பெய்யும். வட்டம் தூரத்தில்
இருந்தால் மழை பெய்யாது. நேற்று வட்டம் தூரத்தில் இருந்ததால் கோவையில் மழை
பெய்யவில்லை. இதுப்பற்றி நம் பெரியவர்களுக்கு நன்கு தெரியும்" என்றார்.

No comments:
Post a Comment