வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கவும் மற்றும் உடனடி சீரமைப்புப் பணிகளுக்கு என்று 500 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னரே கன மழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு நான் உத்தரவு பிறப்பித்திருந்தேன். அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பருவகாலம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களிலேயே கொட்டி தீர்க்கும் போது எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும் மழைநீர் தேங்குவது மற்றும் சேதங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகும். வெள்ளம் மற்றும் சேதங்கள் ஏற்பட்ட இடங்களில் துரிதமாக மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளள.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட தாம்பரம், பல்லாவரம், முடிச்சூர், பள்ளிக்கரணை, நாராயணபுரம், வரதராஜபுரம் போன்ற இடங்களில் 60 முகாம்கள் அமைக்கப்பட்டு 16,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில், தேசிய பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் கடலோரக் காவல்படை மூலமாக தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் படகுகள் மூலமாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்ட நிருவாகத்திற்கு மீட்புப் பணிகளில் உதவிடும் பொருட்டு தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 160 நபர்கள் கொண்ட 9 குழுக்களும், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 60 நபர்கள் கொண்ட 3 குழுக்களும், கடலோர காவல் படையினைச் சார்ந்த 87 நபர்கள் கொண்ட 5 குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவன்றி, சென்னை மாநகரில், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சார்ந்த 43 குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தாம்பரம் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்களை மீட்பதற்கு ராணுவ உதவியும் கோரப்பட்டுள்ளது.
இன்று (16.11.2015) நான் சென்னை மாநகரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, அரசு செய்து வரும் நிவாரணப் பணிகளை பற்றி எடுத்துக் கூறியும் அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் எனது தலைமையிலான அரசு செய்து கொடுக்கும் என்ற உறுதியையும் அளித்துள்ளேன்.
வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான் ஏற்கெனவே அறிவித்தபடி நிவாரண உதவித் தொகை வழங்கவும் மற்றும் உடனடி சீரமைப்புப் பணிகளுக்கு என 500 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்கி நான் ஆணையிட்டுள்ளேன். இதன் அடிப்படையில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நிவாரணம் மற்றும் சீரமமைப்புப் பணிகளை மேலும் விரைந்து செயல்படுத்த அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:
Post a Comment