Latest News

“குடிபோதையில் பணம் கேட்டு தகராறு செய்ததால் மகனை எரித்துக்கொன்றேன்” போதையில் பற்றி எரியும் குடும்பங்கள் !!


கோபி அருகே டிரைவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தாய், “குடிபோதையில் பணம் கேட்டு தகராறு செய்ததால் மகனை எரித்து கொன்றேன்.“ என்று போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

மகன் எரித்துக்கொலை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காமராஜ்நகர் பொம்மாளப்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மனைவி சின்னகண்ணாள் (வயது 55). இவர்களுக்கு வேலுமணி (29) என்கிற மகனும், கலைவாணி (28) என்கிற மகளும் உள்ளனர். வேலுமணி டிரைவர் வேலை செய்து வந்தார்.

குப்புசாமியும், சின்னகண்ணாளும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். சின்னகண்ணாள் வரப்பாளையம் மாரியம்மன்கோவில் வீதியில் தனியாக வசித்து வருகிறார். வேலுமணி தனது தந்தை குப்புசாமியுடன் வாழ்ந்து வந்தார்.

வேலுமணி அடிக்கடி குடித்துவிட்டு தனது தாய் வீட்டிற்கு சென்று சின்னகண்ணாளிடம் தகராறு செய்து வந்தார். இதேபோல் நேற்று முன்தினம் வேலுமணி குடிபோதையில் தனது தாயிடம் தகராறு செய்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் வேலுமணியை கல்லால் தாக்கினார். இதில் மயங்கி விழுந்த அவர்மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து எரித்துக்கொன்றார்.

தாய் கைது

இதுகுறித்து சிறுவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து வேலுமணியை கொலை செய்து தலைமறைவான சின்னகண்ணாளை தேடி வந்தார். இந்தநிலையில் நேற்று காலை சிறுவலூர் போலீசார் செம்மாண்டம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் சின்னகண்ணாள் என்பது தெரியவந்தது. மேலும், வேலுமணியை கொலை செய்தது நான்தான் என்று அவர் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து சின்னகண்ணாளை போலீசார் கைது செய்தனர்.

சின்னகண்ணாள் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

தகராறு

நான் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். எனது மகன் வேலுமணி டிரைவராக இருந்தார். அவர் வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு ஊதாரித்தனமாக ஊர்சுற்றி வந்தார். எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்தார். பணம் கொடுக்காதபோது, தகாத வார்த்தையில் பேசி என்னை தாக்கினார். எனக்கு சொந்தமான நிலத்தை தனது பெயரில் மாற்றி தருமாறு வேலுமணி வற்புறுத்தினார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று நான் அருகில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்றேன். அங்கு வந்த வேலுமணி குடிபோதையில் என்னிடம் தகராறு செய்தார். அதைத்தொடர்ந்து நான் வீட்டிற்கு சென்றுவிட்டேன். என்னை பின்தொடர்ந்து வீட்டிற்கு வந்த வேலுமணி பணம் கேட்டு நச்சரித்தார். நான் கொடுக்க முடியாது என மறுப்பு தெரிவித்ததால் என்னை தகாத வார்த்தையில் பேசினார். மேலும் என்னை கொலை செய்துவிடுவேன் என்றும் அவர் மிரட்டினார். இதில் கோபம் அடைந்தநான் வீட்டிற்கு வெளியே கிடந்த கல்லை எடுத்து வேலுமணியின் தலையில் ஓங்கி அடித்தேன். அவர் மயங்கி கீழே விழுந்தார்.

எரித்துக்கொன்றேன்

வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து வந்து வேலுமணியின் மீது ஊற்றி தீ வைத்தேன். உடல் கருகிய நிலையில் அலறிய அவர் அருகில் உள்ள வைக்கோலில் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அதைத்தொடர்ந்து நான் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டேன். போலீசுக்கு பயந்து தலைமறைவாக திரிந்தபோது போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு சின்னகண்ணாள் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தெரிகிறது.

கைதான சின்னகண்ணாள் கோபிசெட்டிபாளையம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.